சரத்பவார், உத்தவ் தாக்கரேவை சந்தித்தது போல் மம்தா - கெஜ்ரிவால் திடீர் சந்திப்பு: எதிர்கட்சிகளை ஒன்றிணைப்பது குறித்து ஆலோசனை

புதுடெல்லி: டெல்லியில் உள்ள மம்தா பானர்ஜியை, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் திடீரென சந்தித்ததால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டது. மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, டெல்லியில் முகாமிட்டுள்ளார். திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளரான மருமகன் அபிஷேக் பானர்ஜின் அதிகாரபூர்வ இல்லத்தில் தங்கியிருந்த மம்தாவை, டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்றிரவு சந்தித்தார். இருவருக்கும் இடையிலான சந்திப்பு சுமார் 30 நிமிடம் வரை நீடித்தது.  

இந்த சந்திப்பு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆனால் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று திரிணாமுல் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதுகுறித்து அரசியல் வட்டாரங்கள் கூறுகையில், ‘பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி வெற்றி பெற்றதற்காக கெஜ்ரிவாலுக்கு மம்தா வாழ்த்து தெரிவித்தார். இருப்பினும், கோவாவில் திரிணாமுல் காங்கிரஸும், ஆம் ஆத்மியும் தனித்தனியாக போட்டியிட்டன. இரு கட்சியும் அங்கு பெரிய வெற்றியைப் பெறவில்லை.

ஆனால் தற்போது மம்தாவும் கெஜ்ரிவாலும், எதிர்எதிர்  வேட்பாளர்களை நிறுத்தியதை மறந்துவிட்டு சந்தித்துள்ளனர். எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க தொடர்ந்து முயற்சி செய்துவரும் மம்தா, காங்கிரஸ் அல்லாத கூட்டணி அமைப்பது குறித்து கெஜ்ரிவாலிடம் பேசினார். இதற்குமுன் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே போன்ற தலைவர்களையும் மம்தா பானர்ஜி சந்தித்துள்ளார். வரும் 2024ம் ஆண்டில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதிருந்தே மம்தா தயாராகி வருகிறார்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: