ஊட்டி ஓட்டல்களில் சுகாதாரம் இல்லாத 50 கிலோ இறைச்சி அழிப்பு-உணவு பாதுகாப்புத்துறை அதிரடி

ஊட்டி :  ஊட்டி சேரிங்கிராஸ் பகுதியில் உள்ள பாரதியார் காம்பளக்சில் சில ஓட்டல்களில் சுகாதாரமில்லாத உணவுகள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது. இந்த புகாரை தொடர்ந்து நேற்று உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சுரேஷ் தலைமையில் அதிகாரிகள், ஓட்டல்களில் ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட சுமார் 50 கிலோ கோழி இறைச்சி விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. பின்னர் 50 கிலோ கோழி இறைச்சி மற்றும்  சுகாதாரமற்ற தயாரிக்கப்பட் உணவு பொருட்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் அழித்தனர்.

தொடர்ந்து, சேரிங்கிராஸ் மற்றும் கமர்சியல் சாலை பகுதியில் உள்ள ஓட்டல்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது ஒரு ஓட்டலில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அந்த கடைக்கு ரூ.1000 அபராதம் விதித்தனர். இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் சுரேஷ் கூறுகையில்,``சுற்றுலா பயணிகளை பயன்படுத்தி சில ஓட்டல்களில் சுகாதாரமில்லாத உணவு பொருட்கள் தயாரித்து விற்பனை செய்யப்படுகிறது. இதனை தடுக்கும் நோக்கில் அவ்வப்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

எனினும், ஒரு சில கடைகளில் தொடர்ந்து இது போன்ற தவறுகள் நடக்கின்றன. இதனை தடுக்கவே தற்போது சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளுக்கு சுகாதாரமான உணவு வழங்க ஓட்டல்கள் முன் வர வேண்டும். சுகாதாரமில்லாத உணவு பொருட்கள் விற்பனை செய்தால், சம்மந்தப்பட்ட கடை மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதையும், பயன்படுத்துவதையும் ஓட்டல்கள் தவிர்க்க வேண்டும்’’ என்றார்.

Related Stories: