பெருங்குடி குப்பை கிடங்கு தீ விபத்து அரசு வேகமாக நடவடிக்கை எடுத்து கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது: சோழிங்கநல்லூர் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் பேச்சு

சென்னை: சட்டப்பேரவையில் சோழிங்கநல்லூர் தொகுதி எம்எல்ஏ ச.அரவிந்த் ரமேஷ் (திமுக) பேசியதாவது: பெருங்குடி குப்பைக் கிடங்கில்  தீ எந்தளவிற்கு வேகமாக பரவுமோ, அதைவிட வேகமாக நடவடிக்கை மேற்கொண்டு அரசு இயந்திரம் அந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது. மீத்தேன் வாயு மூலமாக தீப்பற்றியது. அதை தடுப்பதற்கு, அரசு இயந்திரங்கள், அது காவல்துறையாக இருக்கட்டும், தீயணைப்பு துறையாக இருக்கட்டும் உடனடியாக நடடிக்கை மேற்கொண்டன. சென்னை மாநகராட்சியினுடைய அலுவலர்கள் எல்லாம் அங்கே முகாமிட்டு, இரவு பகல் பாராமல் பணிகளை மேற்கொண்டார்கள். அமைச்சர் கே.என்.நேரு, தமிழச்சி தங்கபாண்டியன் எம்பி, நான், மாநகர மேயர், துணை மேயர், மண்டல குழுவின் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் ஆகியோரெல்லாம் உடனடியாக இணைந்து அந்த பணிகளை மேற்கொண்டோம். ஸ்கை லிப்ட் என்ற மிகப்பெரிய இயந்திரம் மூலமாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அமைச்சர்களெல்லாம் அதன் மேல் ஏறி பார்வையிட்டார்கள்.

மிகப்பெரிய அளவிலான இந்த தீயை எப்படி அணைப்பார்கள். இந்த தீயை எப்படி கட்டுக்குள் கொண்டு வருவார்கள் என்று மக்களெல்லாம் நினைத்து, அதிர்ச்சியுடன் இருந்தார்கள். 10 ஏக்கரில் இருந்த அந்த தீயானது, இப்போது 1 ஏக்கருக்குள் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இப்போது வெறும் புகை மட்டும்தான் வெளியே கசிந்து கொண்டிருக்கிறது. அதற்காக, 2 ஸ்கை லிப்ட், தீயணைப்புத் துறையின் 11 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் 300 லாரிகளுக்கும் மேலாக தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று, அந்த பகுதியில் இருக்கின்ற 11 ஜேசிபி இயந்திரங்கள், 8 பொக்லைன் இயந்திரங்கள் ஆகியவற்றை பயன்படுத்தி, சென்னை மாநகராட்சியினுடைய 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றுகின்ற ஒரு நிலையில், தமிழக அரசு வேகமாக இந்த தீயைக்கூட கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது என்று அங்குள்ள மக்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: