கொரோனா தொற்று பரவல் எதிரொலி: கோயம்பேடு மார்க்கெட்டில் முககவசம் அணியாதவர்களுக்கு ரூ.500 அபராதம்

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி, பூ, பழம், மளிகைக்கடை என மொத்த மற்றும் சில்லரை விற்பனை கடைகள் இயங்கி வருகிறது. சுமார் 4 ஆயிரம் கடைகள் உள்ளன. ஆசியாவின் மிக பெரிய சந்தையான இந்த மார்க்கெட்டுக்கு, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து சில்லரை வியாபாரிகள், பொதுமக்கள் என தினமும் சுமார் ஒரு லட்சம் பேர் வரை வாகனங்கள் மூலம் வந்து பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.

தற்போது கொரோனா பரவல் சற்று அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் கோயம்பேடு மார்க்கெட் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் சாந்தி தலைமையில், ஒலிபெருக்கி மூலமாக விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. மேலும் அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் கூறுகையில், ‘மார்க்கெட் வளாகத்திற்குள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. அனைத்து வியாபாரிகளுக்கும் உடல் வெப்ப பரிசோதனை செய்யப்படுகிறது.

வியாபாரிகள், தங்களது கடைகளின் முன்பு சானிடைசர் வைத்திருக்க வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும். பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றாத வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்காத கடைகளுக்கு சீல் வைக்கப்படும். வியாபாரிகள், தொழிலாளர்கள் முககவசம் அணியவில்லை என்றால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.  தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, மத்திய பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து வரும் வாகனங்களை அனைத்து நுழைவு வாயில்களிலும் நிறுத்தி டிரைவர், கிளீனர்கள் மற்றும் அவர்களுடன் வரும் தொழிலாளர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்’ என்றார்.   

Related Stories: