பத்திரப்பதிவில் தட்கல் திட்டம்; முதல்வருக்கு வணிகர் சங்கம் பாராட்டு

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநிலத்தலைவர் விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசின் முன்மாதிரி பட்ஜெட் கூட்டத்தில் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, பல்வேறு துறைகளில் உள்ள குறைகளை களையும் விதமாகவும், ஊழலை ஒழிக்கும் வகையிலும், பொதுமக்கள் பயன்பெறும் வகையிலும் பல்வேறு ஆலோசனைகளை வழங்கி கோரிக்கை மனு சமர்ப்பித்திருந்தது.

அதில் குறிப்பாக பத்திரப்பதிவுத்துறை, வாகன பதிவுத்துறை, பட்டா மாற்று அலுவலகங்களில் முறைகேடுகளை தவிர்த்திட தட்கல் திட்டங்களை அறிமுகப்படுத்தி, அரசுக்கு வருவாய் பெருக்கி, கையூட்டை தவிர்த்திடும் விதமாக தமிழ்நாடு அரசு உரிய சட்ட நடவடிக்கைகளை எடுத்திட விடுக்கப்பட்டுள்ள கோரிக்கையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுமையின்கீழ், பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி சட்டமன்றத்தில் மானிய விவாதத்தின்போது தட்கல் திட்டம் பத்திரப்பதிவுத் துறையில் அறிமுகப்படுத்த இருப்பதாக அறிவித்திருப்பதை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு இதயபூர்வமாக வரவேற்கிறது.  

இத்திட்டத்தின் மூலம் அரசுக்கு வருவாய் பெருக்கம் மட்டுமின்றி, இத்திட்டத்தினை பொதுமக்கள் பெரிதும் பயன்படுத்திக்கொள்வார்கள். பொதுமக்களை பாதிக்கும் பத்திரப்பதிவுத்துறை சிரமங்கள் வெகுவாகக் குறையும் என்பதனால், இத்திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் திட்டமாக அமையும்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: