நாளை தேனி, திண்டுக்கல்லில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரை பயணம்

சென்னை: தமிழக அரசு சார்பில், தேனி நகர் மற்றும் பெரியகுளம் பைபாஸ் ரோட்டின் அருகே நாளை விழா நடக்க உள்ளது. இவ்விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு தேனி மாவட்டத்தில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.  புதிய திட்ட பணிகளுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். மேலும், பல்வேறு துறைகள் சார்பில்,  11 ஆயிரம் பேருக்கு ரூ. 300 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். விழா நடக்க உள்ள பகுதியில் பிரமாண்ட அலங்கார பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

நாளை மாலை திண்டுக்கல் அங்குவிலாஸ் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அரசு சார்பில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ளது. இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைப்பதுடன், பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார். தேனியில் உள்ள விழா நடக்க உள்ள பகுதியில் தென்மண்டல போலீஸ் ஐ.ஜி அஸ்ராக்கார்க், டி.ஐ.ஜி ரூபேஷ்குமார்மீனா, தேனி எஸ்.பி பிரவீன்உமேஷ் டோங்கரே உட்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த எஸ்பிக்கள் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

தேனி மற்றும் திண்டுக்கல்லில் நடக்க உள்ள விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இன்று மாலை விமானம் மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை செல்கிறார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் அங்கிருந்து காரில் தேனி மாவட்டம் வைகை அணையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகைக்கு சென்று தங்குகிறார்.

Related Stories: