உயர் நீதிமன்ற கோடை விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் நியமனம்: ஐகோர்ட் பதிவாளர் ஜெனரல் அறிவிப்பு

சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தின் கோடை விடுமுறை காலத்தில் தாக்கலாகும் அவசர வழக்குகளை 20 நீதிபதிகள் விசாரிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில் கூறியிருப்பதாவது: உயர் நீதிமன்ற விடுமுறை மே 2 முதல் ஒரு மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை காலத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிக்க 20 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மே முதல் வாரம் மட்டும் திங்கட்கிழமை மற்றும் புதன் கிழமை மனுத்தாக்கல் செய்யலாம்.

அவை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையில் விசாரிக்கப்படும். மே மாதத்தின் பிற வாரங்களில் திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் மனுத்தாக்கல் செய்யலாம். அவை புதன் மற்றும் வியாழன் கிழமைகளில் விசாரிக்கப்படும். விடுமுறை காலத்தில் அவசர வழக்குகளை விசாரிப்பதற்காக 20 நீதிபதிகள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுகிறார்கள். இதேபோல மதுரை கிளையில் 15 நீதிபதிகள், விடுமுறை கால நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பதிவாளர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

Related Stories: