தமிழகத்தில் கடந்த காலங்களில் நடந்த பத்திரப்பதிவு முறைகேடுகளை கண்டறிய சிறப்பு புலனாய்வு குழு: வணிகவரி, பதிவுத் துறையில் அதிகபட்ச அளவு வருவாய் அதிகரிப்பு; அமைச்சர் பி.மூர்த்தி தகவல்

சென்னை:  தமிழக சட்டப் பேரவையில் நேற்று வணிகவரி மற்றும் பதிவுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: தமிழ்நாட்டின் மொத்த சொந்த வரி வருவாய், ரூ.1,36,647.94 கோடியில், 87 சதவிகிதம், அதாவது ரூ.1,18,883.71 கோடி வருவாயை ஈட்டித் தரும் துறைகளாக, வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை உள்ளன. வணிகவரித்துறையில் அரசுக்கு வர வேண்டிய வருவாய், முழுமையாக கிடைக்கப் பெறாத நிலை இருந்து வந்தது. வரி ஏய்ப்புகளும், போலி பட்டியல் தயாரிப்புகளும், அரசின் வருவாயில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருந்தன.

வணிகவரித்துறையின் நிலை இப்படியென்றால், பதிவுத்துறையின் நிலையோ, அதைக் காட்டிலும் பின் தங்கியிருந்தது. போலி ஆவணங்கள் மூலம் நடந்தேறிய முறைகேடுகள், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் வகையில் அரங்கேறிய பதிவுகள், அப்பாவி பொதுமக்கள் தங்கள் சொத்துகளை தாங்களே அறியாமல் பறிகொடுத்த நிகழ்வுகள், பதிவுத்துறையில் மலிந்து கிடந்தன.  வணிகவரித் துறையில் கடந்த ஆண்டை விட ரூ.8,760.83 கோடி கூடுதலாக, அதாவது, ரூ.1,04,970.06 கோடி வருவாயாக பெறப்பட்டுள்ளது.

இது போலவே பதிவுத்துறையிலும் அரசு வருவாய் முந்தைய ஆண்டின் வருவாயை விட, ரூ.3,270.57 கோடி அதிகரித்து, 2021-22ம் ஆண்டு ரூ.13,913.65 கோடியாக உயர்ந்துள்ளது. பதிவுத் தவறுகளும், போலி ஆவணப் பதிவுகளும் அதிகமாக இருந்த பதிவுத்துறையில் வருவாயை பெருக்குவது சாத்தியமா என எல்லோரும் ஐயம் கொண்டிருந்த நிலையில், முதல்வரின் வழிகாட்டுதலின் படி, திமுக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்ட பல்வேறு அறிவு சார்ந்த செயல் திட்டங்களின் காரணமாக, பதிவுத்துறையின் வரலாற்றிலேயே இதுவரையில் இல்லாத அளவிற்கு வருவாய் ஈட்டப்பட்டது.

ஜிஎஸ்டி சேவைகளையும் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் தமிழிலும் வழங்குமாறு கேட்டு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி இணையத்திற்கு தமிழக அரசால் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஜிஎஸ்டிக்கு முன்பு, நடைமுறையில் இருந்த முந்தைய சட்டங்களின் கீழ், வணிகர்களின் பிரச்னையை தீர்க்க ரு முறை தீர்வாக ‘சமாதான திட்டம்’ செயல்படுத்துவது தொடர்பாக அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில், பதிவுத்துறையில் போலி ஆவணங்கள் பதிவு, அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்துதல், அங்கீகாரமற்ற மனைகள் பதிவு, போன்ற தவறுகள் நடந்துள்ளன. இதுபோன்ற தவறுகள் தொடர்ந்து நடக்காமல் இருக்க, உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கடந்த காலத்தில், பதிவு செய்யப்பட்ட போலி ஆவணங்களால், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.

இந்த ஆவணங்களை ரத்து செய்ய, உரிய சட்ட திருத்தம் இம்மாமன்றத்தால் ஏற்கப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரது ஒப்புதலுக்கு பின்னர், அனைத்து போலி ஆவணங்களையும் கண்டுபிடித்து ரத்து செய்யப்படும். உண்மையான சொத்தின் உரிமையாளருக்கு சொத்து ஒப்படைக்கப்படும். திருமணச் சான்று நகல்களை பெற, கிறித்துவ பொதுமக்கள் சென்னையில் உள்ள பதிவுத்துறை தலைவர் அலுவலகத்திற்கு நேரில் வரவேண்டியிருந்தது. இதனை மாற்றி, அந்தந்த மண்டலத்திலேயே உள்ள துணை பதிவுத்துறை தலைவர் அலுவலகத்திலேயே, இத்திருமணச் சான்று நகல்களைப் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவுத்துறையில் வரி வருவாயை, மேலும் பெருக்கும் நடவடிக்கைகளை கழக அரசு மேற்கொண்டு வருகிறது. வழிகாட்டி மதிப்பு சீரமைக்கும் குழு அமைக்க, அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில், மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சந்தை வழிகாட்டி மதிப்புகள், ஆய்வு செய்யப்பட்டு, உண்மையான சொத்து மதிப்பிற்கேற்றவாறு அவை மாற்றியமைக்கப்படும். இதனால் அரசுக்கு வர வேண்டிய வருவாய் உயர்வதோடு, பொதுமக்களுக்கும் நியாயமான கட்டணம் செலுத்தும் நிலை உருவாகும். பதிவுத்துறையில், கடந்த காலங்களில் நடந்த பதிவு முறைகேடுகள், அதாவது, தவறான ஆவணப்பதிவுகள், போலி பதிவுகள், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தப்பட்ட இனங்கள் ஆகியவற்றை கண்டறிந்து சரிசெய்வதற்காக, ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்க, அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: