தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி மீண்டும் நடைபெற யார் காரணம்? பேரவையில் காரசார விவாதம்

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று நடந்த கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை, வணிக வரி மற்றும் பதிவுத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பரமத்தி வேலூர் சேகர்(அதிமுக) பேசும்போது, சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தை, ‘‘ஜல்லிக்கட்டு நாயகன்” என்று கூறினார். அவர் பேசி முடித்ததும், செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் எழுந்து, ‘‘உறுப்பினர் இங்கே எதிர்க்கட்சி துணைத் தலைவரை ஜல்லிக்கட்டு நாயகன் என்று கூறினார். அவர் எத்தனை ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்றிருக்கிறார்? என்றார்.

கே.ஏ.செங்கோட்டையன் (அதிமுக): தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாத நிலை ஏற்பட்டபோது, ஒன்றிய அரசை அணுகி, அதற்கான அனுமதியை ஓ.பன்னீர்செல்வம் பெற்று தந்தார்.

வணிகவரி துறை அமைச்சர் மூர்த்தி: அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, இனி இதுபோன்ற போட்டிகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது என மாவட்ட காவல் துறைக்கு உத்தரவிட்டார். பிறகு, திமுக ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கையின் மூலம் 2014ம் ஆண்டு வரை ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. அதன்பிறகு, நீதிமன்ற நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படாததால் மீண்டும் தடை வந்தது.

எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம்: அமைச்சர் சொல்வது தவறான தகவல். நாங்கள் மத்திய அரசை அணுகி அனுமதி பெற்றுவந்தோம். ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இதுதான் உண்மையான வரலாறு.

அமைச்சர் மூர்த்தி: 2014ம் ஆண்டு வரை ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. அதன்பிறகு, அதற்கு தடை விதிக்கப்பட்ட நேரத்தில் தமிழகத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தின் விளைவாகத்தான் மீண்டும் அனுமதி கிடைத்தது.

ஓ.பன்னீர்செல்வம்: அமைச்சர் சொல்வது தவறு.காளையை விலங்குகள் பட்டியலில் சேர்த்ததால்தான் ஜல்லிக்கட்டுக்கு தடை வந்தது. நாங்கள் காளைகளாக இருந்தபோது எங்கள் தெருவில் ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. அதில் பங்கேற்று காளைகளை அடக்கிய வரலாறும் உண்டு. எனவே, மீண்டும் ஜல்லிக்கட்டு போட்டி நடக்க அதிமுகதான் காரணம்.

அவை முன்னவர் துரைமுருகன்: இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் வந்தபோது, நான் எகிப்து நாட்டில் இருந்தேன். தலைவர் கலைஞர் உடனே என்னை டெல்லி வரும்படி கூறினார். நானும் உடனே டெல்லி சென்று வழக்கை சந்தித்தேன். வழக்கு முடிந்தது. ஜல்லிக்கட்டுக்கு அனுமதியும் கிடைத்தது. அதற்கு காரணமாக இருந்த நானே இங்கே சும்மா இருந்து கொண்டிருக்கிறேன். நீங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்.

Related Stories: