கரூர், நாகை, சிவகங்கையில் புதிய வேளாண்மை கல்லூரி: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: வேளாண்மைத் துறை சார்பில் கரூர், நாகை, சிவகங்கையில் புதிய வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். 2021-2022 வேளாண்மை பட்ஜெட்டில் அறிவித்தபடி,  தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ், கிருஷ்ணகிரி மாவட்டம், ஜீனூரில் புதிய தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் புதிய மஞ்சள் ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூர் -  வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.

மேலும், கரூர் மாவட்டம் - கரூர், நாகப்பட்டினம் மாவட்டம் - கீழ்வேளூர் மற்றும் சிவகங்கை மாவட்டம் - செட்டிநாடு ஆகிய மூன்று இடங்களில் புதிய வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையங்களை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மேலும், கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில், இளம் அறிவியல் (மேதமை) வேளாண்மை மற்றும் இளம் அறிவியல் (மேதமை) தோட்டக்கலை ஆகிய பட்டப்படிப்புகளில் இந்த கல்வியாண்டு முதல் தமிழ்வழிக் கல்வி பாடத்திட்டம் மற்றும் திருச்சி மாவட்டம், குமுளூரில் உள்ள வேளாண்மைப் பொறியியல் கல்லூரி வளாகத்தில் வேளாண்மைப் பொறியியல் பட்டயப்படிப்பு ஆகியவை முதலமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டது.  இக்கல்லூரிகளில் இக்கல்வியாண்டில் தலா 50  மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்றுள்ளது.

இதன்மூலம், அதிகரித்து வரும்  வேளாண் கல்வி மற்றும் வேளாண் ஆராய்ச்சிகளின் தேவை பூர்த்தி செய்யப்படுவதோடு, மாணவர்கள் மற்றும் வேளாண் பெருமக்களின் பயன்பாட்டிற்கு  மிகவும் பேருதவியாக அமையும் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், முத்துசாமி, கே.ஆர்.பெரியகருப்பன், செந்தில்பாலாஜி, ஆர்.காந்தி, சிவ.வீ.மெய்யநாதன், எம்எல்ஏ நாகை மாலி, தலைமைச் செயலாளர் இறையன்பு, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை உழவர் நலத்துறை செயலாளர் சமயமூர்த்தி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழக துணைவேந்தர் வெ.கீதாலட்சுமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: