சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு

சென்னை: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில்   திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை  சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக எம்.எல்.ஏ.வாக வெற்றி பெற்ற அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை உயர் நீதிமன்ற நீதிபதி பாரதிதாசன் ஏற்கனவே தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார். இதற்கிடையில் இதே தொகுதியில் உள்ள ஆர்.பிரேமலதா என்ற வாக்காளர் தாக்கல் செய்த மனுவில், தேர்தலின்போது உதயநிதி ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில், அவருக்கு எதிரான வழக்குகள் குறித்து தவறான தகவல்களை தெரிவித்துள்ளார்.

எனவே, அவரது வேட்புமனுவை தேர்தல் அதிகாரி ஏற்றதை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் எனக்கோரியிருந்தார். இந்த வழக்கை நிராகரிக்க கோரி உதயநிதி ஸ்டாலின் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு  நீதிபதி பாரதிதாசன் முன்பு விசாரணைக்கு வந்தது. உதயநிதி ஸ்டாலின் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார். தீர்ப்பில், வழக்கில் மனுதாரர் கூறியுள்ள குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் தாக்கல் செய்யவில்லை. எனவே, வழக்கை நிராகரிக்க கோரிய உதயநிதி ஸ்டாலின் மனு ஏற்றுக்கொள்ளப்படுகிறது. உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: