திருச்சி தேசிய சட்ட பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு முதல் 69% இடஒதுக்கீடு: அமைச்சர் எஸ்.ரகுபதி தகவல்

சென்னை: பேரவையில் நேற்று சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள், சட்டத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து அமைச்சர் எஸ்.ரகுபதி பேசியதாவது: திருச்சியில் இருக்கக்கூடிய தேசிய சட்டப் பல்கலைக்கழகத்திலும் இந்த ஆண்டு முதல் 69 சதவீத இடஒதுக்கீட்டை முதன்முதலாக அறிமுகப்படுத்துகிறோம். தமிழகத்தில் சிறப்பு நீதிமன்றங்களையும் சேர்த்து இன்று 1288 நீதிமன்றங்கள் இயங்கி வருகிறது. இவற்றில் சென்னையில் மட்டும் 144 நீதிமன்றங்கள் இயங்கி வருகிறது. இந்த நீதிமன்றங்கள் போதாது என்று இங்கு பேசிய உறுப்பினர்கள் பேசினார்கள். இன்னும் வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு காரணம், 31.12.2021 வரை நீதிமன்றங்களில் 15 லட்சத்து 90 ஆயிரத்து 924 வழக்குகள் தேங்கியுள்ளன. புதிய நீதிமன்றங்களை உருவாக்க தேவையான நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்து வருகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் மொழியை அலுவல் மொழியாக பயன்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது.

* 4 அரசு சட்டக்கல்லூரிகளில் முதுநிலை பட்டப்படிப்பு அமைச்சர் எஸ்.ரகுபதி வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:  

சென்னை டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரி, புதுப்பாக்கம் மற்றும் செங்கல்பட்டு மற்றும் திருநெல்வேலி அரசு சட்டக் கல்லூரிகளில் கூடுதலாக முதுநிலை (எல்.எல்.எம்.) பட்டப்படிப்பு பிரிவுகள் வரும் கல்வியாண்டு முதல் தொடங்கப்படும். செங்கல்பட்டு மற்றும் வேலூர் அரசு சட்டக் கல்லூரிகளில் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் ரூ.25 லட்சம் செலவில் நிறுவப்படும்.

Related Stories: