செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை வருவதற்கும் செல்வதற்குமான போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு உயர்மட்ட சாலை அமைக்க ஒன்றிய அரசிடம் வலியுறுத்தல்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

சென்னை: சட்டப்பேரவையில் வினாக்கள் - விடைகள் நேரத்தின் போது, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்.எல்.ஏ., ஈஸ்வரன் பேசுகையில் ‘‘சென்னைக்கு உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும், முடியாத அளவுக்கு கடும் போக்குவரத்து நேரிசல் ஏற்படுகிறது. செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் உயர்மட்ட சாலை அமைப்பதற்கான திட்டம் அரசிடம் இருக்கிறதா” என்றார். இதற்கு பதிலளித்து பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில், ‘‘செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வருவதற்கு 1 மணி நேரத்துக்கும் மேல் ஆகிறது. இதே போல் ஸ்ரீபெரும்புதூரில் கடும் போக்குவரத்து நெரிசல் இருப்பது அரசுக்கு தெரியும். செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வரையிலும், பூந்தமல்லியில் இருந்து பெரும்புதூர் வரையிலும், போக்குவரத்து நெரிசலை குறைக்க உயர்மட்ட சாலை போடுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு ஒன்றிய அரசிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. விரைவாக பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.

மேலும், எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எ.வ.வேலு, ‘‘மணப்பாறை, முசிறி இருவழிச்சாலைகளை 4 வழிச் சாலைகளாக மாற்றி அமைக்கும் பணியை தலைமைப் பொறியாளரின் ஆய்வு முடிந்த பின், நிதிநிலைக்கேற்ப இந்த ஆண்டே பணிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். தொழிற்சாலைகள் அதிகம் உள்ள ஒசூர் சாலையை 4 வழி சாலையாக மாற்றுவது குறித்தும் இந்த ஆண்டிலேயே முடிவெடுக்கப்படும்.பழனி சாலையை அகலப்படுத்தும் பணி ஆய்வு நிலையில் இருக்கிறது ” என்றார்.

Related Stories: