அதிமுக உட்கட்சி தேர்தல் விவகாரம் வழக்கு தொடர உறுப்பினர்களுக்கு அனுமதி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர 2 உறுப்பினர்களுக்கு அனுமதியளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிமுக உள்கட்சி தேர்தலை எதிர்த்து கட்சி உறுப்பினர்கள் எனக் கூறி ராம்குமார், சுரேன் பழனிசாமி ஆகியோர் சிவில் வழக்கு தாக்கல் செய்ய அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின், கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இது  அதிமுகவின் சட்ட திட்டங்களுக்கு எதிரானது. எனவே, பொதுச்செயலாளரின் அதிகாரங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு வழங்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்.  

கடந்த டிசம்பர் மாதம் நடந்த உள்கட்சி தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்சியின் உறுப்பினர்களாக இல்லாத மனுதாரர்களுக்கு, இந்த வழக்கை தாக்கல் செய்ய உரிமையில்லை என்பதால், வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது மனுதாரர் தரப்பில், கடந்த 2000ம் ஆண்டு முதல் கட்சியின் உறுப்பினராக உள்ளதாகவும், உறுப்பினர் அட்டை புதுப்பிக்கப்பட்டு, இன்று வரை உறுப்பினராக உள்ளதாகவும் வாதிடப்பட்டதுடன் உறுப்பினர் அடையாள அட்டையும் தாக்கல் செய்யப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அதிமுக உட்கட்சி தேர்தலை எதிர்த்து வழக்கு தொடர மனுதாரர்களுக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.

Related Stories: