தமிழக விமான நிலையங்கள் ரூ.7,000 கோடியில் மேம்படுத்தப்படும்: தென்மண்டல செயல் இயக்குநர் பேட்டி

திருச்சி: திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் நடந்து வரும் புதிய முனைய கட்டுமான பணிகளை இந்திய விமான நிலைய குழும தென்மண்டல செயல் இயக்குநர் சஞ்சீவ் ஜிண்டல் நேற்று ஆய்வு செய்தார். இதைதொடர்ந்து அவர் அளித்த பேட்டி:  திருச்சி விமான நிலையத்தில் புதிய முனையம், தற்போதுள்ள விமான நிலைய கட்டிடத்தை விட 5.5 மடங்கு பெரிதாக மிக சிறப்பான திட்டமிடலுடன் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்த பின்பு நாட்டிலேயே மிகவும் அழகான விமான நிலையமாக இருக்கும். கொரோனா, கனமழை போன்றவற்றால் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்க முடியவில்லை.

2023, ஜூன் மாதத்துக்குள் பணிகள் முடிந்து செயல்பாட்டுக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். திருச்சி விமான நிலைய விரிவாக்கத்துக்காக இதுவரை 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலங்களை கையகப்படுத்துவதற்கான பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. அடுத்த 3 ஆண்டுகளில் தமிழகத்தில் உள்ள விமான நிலையங்கள் ரூ.7,000 கோடியில் மேம்படுத்தப்படும். தூத்துக்குடி, சேலம், வேலூர் விமான நிலையங்களிலும் மேம்பாட்டு பணிகள் நடந்து வருகிறது. சென்னை விமான நிலைய விரிவாக்கத்துக்கான முயற்சி துவங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: