போதையில் தூங்கியவர்களை கண்டித்ததால் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி அடித்து கொலை: 2 ரவுடிகள் கைது

சென்னை: கடலூர் மாவட்டம் திட்டக்குடி லாகூர் பகுதியை சேர்ந்தவர் பூமாலை (52). இவர், சென்னை அசோக்நகர் 10வது அவென்யூவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் செக்யூரிட்டியாக கடந்த 6 ஆண்டுகளாக வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை  இவர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடியுள்ளார். அவரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். போலீசார் விசார ணையில், அடுக்குமாடி குடியிருப்பு முன் போதையில் படுத்து தூங்கிய  4 வாலிபர்களை செக்யூரிட்டி பூமாலை எழுப்பி, அங்கிருந்து செல்லுமாறு கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 4 வாலிபர்களும், அடுக்கமாடி குடியிருப்பில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து செக்யூரிட்டியை சரமாரியாக அடித்துவிட்டு சென்றது தெரியவந்தது.

மேலும் விசாரணையில், மேற்கு மாம்பலம் ஆண்டியப்பன் தெருவை சேர்ந்த சதீஷ்குமார் (எ) சபாபதி (20), தனது கூட்டாயிகளான அசோக் நகர் புதுஹர் 13வது தெருவை சேர்ந்த ரவுடிகளான வெங்கடேசன் (எ) டோரி வெங்கடேசன் (18), கார்த்திக் (எ) கானா கார்த்திக் (19), சந்தோஷ்குமார் (23) ஆகியோர் செக்யூரிட்டியை கொன்றது தெரியவந்தது. அதைதொடர்ந்து ரவுடிகளான கார்த்திக் (எ) கானா கார்த்திக், சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 2 பேர் மீது அசோக்நகர், குமரன் நகர் காவல் நிலையங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள சதீஷ்குமார் (எ) சபாபதி, வெங்கடேசன் (எ) டோரி வெங்கடேசனை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: