ஐஐடி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் சிபிசிஐடி விசாரணை தொடங்கியது: விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமனம்

சென்னை: ஐஐடி மாணவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில், சிபிசிஐடி தனது விசாரணையை தொடங்கியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் நியமிக்கப்பட்டுள்ளார். முதற்கட்டமாக பாலியல் புகார் அளித்த மாணவியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சென்னை ஐஐடியில் படித்து வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர், தன்னுடன் பயின்ற சக ஆராய்ச்சி மாணவன் கிங்ஷீக்தேவ் சர்மா என்பவரால் கடந்த 2017ம் ஆண்டு பாலியல் தொந்தரவுக்கு ஆளானார். அதோடு இல்லாமல் தன்னுடைய நண்பர்களான சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து மாணவியை மிரட்டி தொடர் கூட்டு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவி தனது பேராசிரியர் எடமன் பிரசாத்திடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால் புகார் மீது அவர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் மனவேதனையில் இருந்த மாணவி 3 முறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

பின்னர் வேறு வழியின்றி கடந்த 2021 மார்ச் 29ம் தேதி தேசிய மகளிர் ஆணையத்திற்கும், கோட்டூர்புரம் காவல் நிலையத்திலும் மாணவி புகார் அளித்தார். பாலியல் புகார் என்பதால் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கு மாற்றப்பட்டது. மாணவி அளித்த புகாரின் படி ஐஐடியில் ஆராய்ச்சி மாணவர்களான கிங்ஷீக்தேவ் ஷர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ, டாக்டர் ரவிந்திரன், எடமன பிரசாத், நாராயண் பத்ரா, செளர்வ தத்தா, அய்யன் பட்டாசார்யா ஆகிய 8 பேர் மீது ஐபிசி 354, 354(பி), 354(சி), 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆனால் வழக்கு பதிவு செய்து 9 மாதங்களாகியும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் இந்த வழக்கை கையில் எடுத்து அழுத்தம் கொடுத்தனர். பின்னர் முன்னாள் மாணவன் மீது எஸ்சி, எஸ்டி வழக்கு மற்றும் கற்பழிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து மயிலாப்பூர் போலீசார் மேற்கு வங்கம் டைமண்ட் ஹார்பர் மாவட்டம் ராயல்நகரில் பதுங்கி இருந்த முக்கிய குற்றவாளி கிங்ஷீக் தேவ் சர்மாவை கடந்த மாதம் 28ம் தேதி கைது செய்து டைமண்ட் ஹார்பர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி டிரான்சிட் வாரண்ட் வாங்க முயன்ற போது, மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் கிங்ஷீக் தேவ் சர்மா முன் ஜாமீன் வாங்கி உள்ளதால் அவரை தனிப்படை போலீசாரிடம் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.

இதையடுத்து இந்த வழக்கில் போலீசாருக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதேநேரம் பாலியல் வழக்கில் தொடர்புடைய 2 ஐஐடி பேராசிரியர்கள் உயர் நீதிமன்றத்தில் நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் பெற்றுள்ளனர். மேலும், ஐஐடி மாணவி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 2 பேர் வெளிநாட்டில் உள்ளனர். இதனால் இந்த வழக்கில் தோய்வு ஏற்பட்டது. பின்னர் இந்த வழக்கை சென்னை மாநகர காவல்துறையில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டார்.

அதைதொடர்ந்து சிபிசிஐடி மாணவியின் பாலியல் வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ளது. வழக்கின் விசாரணை அதிகாரியாக டிஎஸ்பி வெங்கடேசன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து இந்த வழக்கின் விபரங்கள் அடங்கிய கோப்பை சிபிசிஐடி போலீசாரிடம் மகளிர் போலீசார் ஒப்படைத்தனர். பின்னர் சிபிசிஐடி டிஎஸ்பி வெங்கடேசன் தலைமையிலான போலீசார் முதற்கட்டமாக பாலியல் புகார் அளித்த ஐஐடி முன்னாள் மாணவியிடம் விசாரணை தொடங்கியுள்ளனர். இதனால் பாலியல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஆராய்ச்சி மாணவர்களான கிங்ஷீக்தேவ் ஷர்மா, சுபதீப் பேனர்ஜி, மலாய் கிருஷ்ண மகதோ, டாக்டர் ரவிந்திரன், எடமன பிரசாத், நாராயண் பத்ரா, செளர்வ தத்தா, அய்யன் பட்டாசார்யா ஆகிய 8 பேரிடம் விசாரணை நடத்த சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. இதனால் ஐஐடி பேராசிரியர்கள் உட்பட 8 பேருக்கும் ஓரிரு நாளில் சம்மன் அனுப்பட்டு விசாரணை தொடங்கப்படும் என்று சிபிசிஐடி வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: