தயக்கமின்றி நிதி ஒதுக்கும் முதல்வருக்கு நன்றிமக்களுக்கு அருகிலேயே நீதி கிடைக்கவே நீதிமன்றங்கள் திறப்பு-ஐகோர்ட் தலைமை நீதிபதி பேச்சு

பேராவூரணி : தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் நேற்று மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழா பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. விழாவிற்கு சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கலந்து கொண்டு பேசுகையில், உயர்நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்று குறைந்த காலத்திலேயே மிகச்சிறப்பான பல சாதனைகளை தலைமை நீதிபதி செய்துள்ளார். சென்னையில் பல்வேறு மாவட்ட ங்களை உள்ளடக்கிய நீதிமன்றங்களுக்கு புதிய இடத்தை தேர்வு செய்து அதற்கான உத்தரவையும் முதல்வரிடம் பெற்றுள்ளார் என்றார்.

விழாவில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி நீதிமன்றத்தை திறந்து வைத்து பேசியது, தஞ்சை பெரிய கோவிலை முதல் முறை நான் வந்து பார்த்து பிரமித்த பிறகு ஒவ்வொரு முறையும் இந்த பகுதிக்கு வருவதற்கு ஏதாவது காரணம் கிடைக்காதா என ஏங்குகிறேன். அந்த அளவிற்கு இந்த பகுதியின் கலாச்சாரமும், பண்பாடும் என்னை கவர்ந்துள்ளது. தமிழக அரசும், முதலமைச்சரும் நீதித்துறை தொடர்பான பணிகளுக்கு எவ்வித தயக்கமுமின்றி நிதி ஒதுக்குவதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

நீதியை தேடி மக்கள் அலையக்கூடாது. மக்களுக்கு அருகிலேயே நீதி கிடைக்க வேண்டும். அதனடிப்படையில் நீதிமன்றங்கள் திறக்கப்படுகிறது. நீதிமன்றங்கள் திறக்கப்படுவதால் சட்டப்பிரச்னைகள் தீரலாம். ஆனால் மக்கள் மனங்களில் மனிதநேயம் வளரவேண்டும் அதற்கான காரணங்களை வழக்கறிஞர்களும், பொதுமக்களும் உருவாக்க வேண்டும். பார் கவுன்சிலின் கோரிக்கைகளை முடிந்தவரை நிறைவேற்றி தருகிறேன் என்றார்.

விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பாரதிதாசன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், பவானி சுப்பராயன், தமிழ்செல்வி, எம்எல்ஏக்கள் பேராவூரணி அசோக்குமார், பட்டுக்கோட்டை அண்ணாதுரை, முன்னாள் எம்எல்ஏ கோவிந்தராசு, பேராவூரணி பேரூராட்சி தலைவர் சாந்தி சேகர், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் செல்வராசு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: