கடைகளில் திடீர் சோதனை 5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்-ஆற்காட்டில் கலெக்டர் அதிரடி

ஆற்காடு : ஆற்காட்டில் கலெக்டர் தலைமையில் தொடர்ந்து நடைபெறும் அதிரடி சோதனையில் நேற்று 5 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களை  தமிழக அரசு தடை  செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அவற்றை விற்பனை செய்வதையும்  வாங்கி  பயன்படுத்துவதையும் கண்காணித்து அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

 இந்நிலையில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நேற்று பஜார் வீதி, மார்க்கெட் உட்பட பல்வேறு இடங்களில் அதிரடி பிளாஸ்டிக் ரெய்டு நடைபெற்றது. இதில் 3 டன் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளாஸ்டிக் ரெய்டின் போது சீல் வைக்கப்பட்ட கடையை திறந்து பார்த்தபோது அதில் 2 டன் பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

 இதுபோன்ற அதிரடி சோதனை நடவடிக்கை தொடர்ந்து நடைபெறும். சுற்றுச்சூழலை பாதித்து தீங்குவிளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்வதையும், அதை வாங்கி பயன்படுத்துவதையும் அனைவரும் தவிர்க்க வேண்டும் என்று கலெக்டர் பாஸ்கர பாண்டியன் அறிவுறுத்தினார். அப்போது ஆற்காடு தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சுகாதார ஆய்வாளர் செல்வராஜ், விஏஓ கபிலன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். ஏற்கனவே கடந்த 21ம் தேதி இரவு கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 4 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: