செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற சிறப்பு கிராமசபை கூட்டங்களில் தலைமை செயலாளர் பங்கேற்பு: கிராம மக்களுடன் கலந்துரையாடினார்

சென்னை: தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு ஊராட்சிகளில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு பங்கேற்று கிராம மக்களுடன் கலந்துரையாடினார். தேசிய ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட புதுப்பாக்கம் ஊராட்சியில் நேற்று நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கலந்துகொண்டார். இந்த கிராமசபைக் கூட்டத்தின் துவக்க நிகழ்வாக தமிழ்நாடு முதலமைச்சரின் தேசிய ஊராட்சிகள் தின வாழ்த்து மடல் வாசிக்கப்பட்டது.

இச்சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில் 18 தீர்மானங்கள் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன. அப்போது, தலைமைச் செயலாளர் ‘வளர்ச்சி அடைந்து வரும் புதுப்பாக்கம் ஊராட்சி, அனைத்து ஊராட்சிகளுக்கும் முன் மாதிரியாக திகழும் வகையில் சாதி பாகுபாடுகள் இன்றி மயானம் பயன்படுத்திடவும், இட நெருக்கடிகளை தவிர்த்திடும் வகையில் நவீன தகன மேடை அமைத்திட அறிவுறுத்தினார்’.அதனைத் தொடர்ந்து, பொன்மார், மாம்பாக்கம் மற்றும் மேலக்கோட்டையூர் பகுதிகளில் நடைபெற்ற சிறப்பு கிராம சபைக் கூட்டங்களிலும் தலைமைச் செயலாளர் பங்கேற்று கிராம மக்களுடன் கலந்துரையாடினார். மேலும், மாம்பாக்கம் ஊராட்சியில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரம் குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீடுகளை தலைமைச் செயலாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories: