ஐகோர்ட் உத்தரவையடுத்து காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம்: நீலகிரி மாவட்ட டாஸ்மாக் கடைகளில் அமலுக்கு வந்தது

சென்னை: மலைவாசஸ்தலமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்பப் பெற்றுகொள்ளும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வன பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள், மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையத்தில் வெளியான காணொலிக் காட்சி அடிப்படையில் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது. அப்போது, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்யப்படும் மதுபானங்களை அருந்திவிட்டு வனப்பகுதிகளில் காலி பாட்டில்களை வீசிச் செல்கிறார்கள்.

இவற்றை விலங்குகள் மிதிக்கும்போது காயமடைகின்றன. அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுகின்றன. இந்த கண்ணாடி பாட்டில்களை டாஸ்மாக் கடைகளுக்கே திரும்ப தந்தால் அதற்காக ரூ.10 வழங்கலாமே. அப்படி செய்தால் பாட்டில்களை ஒருவரும் வீசிவிட்டு செல்ல மாட்டார்கள். அதுமட்டுமல்லாமல் பணம் கிடைக்கும் என்பதற்காக அந்த காலி பாட்டில்களை பலர் சேகரிக்க தொடங்கிவிடுவார்கள். இந்த திட்டம் 100 சதவீதம் பலன் தராவிட்டாலும் 50 சதவீதமாவது பலன் தரும். எனவே, இதுகுறித்து ஒரு திட்டத்தை அரசு வரும் 25ம் தேதிக்குள் வகுக்க வேண்டும். வேறு மாற்று திட்டம் இருந்தாலும் வகுக்கலாம் என்று தெரிவித்தது. இந்நிலையில், மலைவாசஸ்தலமான நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் போது அவற்றிற்கு ரூ.10 வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசின் உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர், டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு அனுப்பியுள்ள கடிதம்: நீலகிரி மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில், ஒவ்வொரு மதுபாட்டில்களை விற்பனை செய்யும் போதும் நிர்ணயிக்கப்பட்ட விலையில் இருந்து பாட்டில் ஒன்றுக்கு கூடுதலாக ரூ.10 பெற்றுக்கொள்ள வேண்டும். டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்களை திரும்ப ஒப்படைக்கும் நபர்களுக்கு ரூ.10 வழங்க வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் அடையாளத்திற்காக பாட்டில்களின் மீது ரப்பர் ஸ்டாம்ப் அச்சிட்டு விற்பனை செய்ய வேண்டும். டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் நீலகிரி மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை எடுத்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

Related Stories: