மொழிக்காக தமிழர்கள் எப்போதும் முதலில் வருவார்கள் நீதித்துறையை பலப்படுத்த முதல்வர் முழு ஒத்துழைப்பு தருகிறார்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பாராட்டு

சென்னை: மொழிக்காக தமிழர்கள் எப்போதும் முதலில் வருவார்கள். நீதித்துறையை பலப்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முழு ஒத்துழைப்பு வழங்கிவருகிறார் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் நிர்வாகப்பிரிவு கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா, நாமக்கல், விழுப்புரம் சங்கராபுரம் நீதிமன்றம் கட்டிட திறப்பு விழா மற்றும் கொரோனாவால் பலியான வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.7 லட்சம் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி ஆகியவை சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி ரமணா, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியம், எம்.எம்.சுந்தரேஷ், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, உயர் நீதிமன்ற நீதிபதிகள், அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், அகில இந்திய பார்கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன், மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், வக்கீல் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், மெட்ராஸ் பார் அசோசியேசன், பெண் வழக்கறிஞர்கள் சங்கம், லா அசோசியேசன் ஆகியவற்றின் பிரதிநிதிகள், மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

 நிகழ்ச்சியில், சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் தமிழகத்தில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள வணிக நீதிமன்றத்தை  தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் கொரானா தொற்றில் உயிரிழந்த வழக்கறிஞர்களுக்கு சேம நல நிதியில் இருந்து தலா 7 லட்சம் ரூபாய்  நிதியை வழங்கினார்.

நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சென்னை உயர் நீதிமன்றத்தின் நிர்வாக கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டினார். நாமக்கல் மற்றும் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிடம்  நீதிபதிகளுக்கான குடியிருப்புகள் ஆகியவற்றையும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி  திறந்து வைத்து பேசியதாவது: சென்னை வழக்கறிஞர்கள் நீதித்துறையை வலுப்படுத்தும் பணிகளில் முக்கிய பங்காற்றுகிறார்கள். அரசியல் சாசன வரைவு பணியில் எராளமான தமிழர்கள் பங்கேற்றுள்ளனர். அரசியல் சாசன கடமையை நிறைவேற்றுவது என்பது சுமையான பணி தான் என்ற போதும் அதை சிறப்பாக செய்து வருகிறேன்.

 ஆக்கப்பூர்வமான தீர்வுகள் காணும் போது நீதிபதிகள் கண்களை மூடி சட்டத்தை மட்டும் சார்ந்திருக்க முடியாது. சமூக உண்மையை உணர வேண்டும்.

தற்போது உலக நடப்புகள் 5 நாட்கள் டெஸ்ட் மேட்சிலிருந்து 20:20 என்பது மாதிரி சுருங்கிவிட்டது. உடனடி காப்பி, உடனடி நூடுல்ஸ் போல உடனடி நீதியையும் மக்கள் எதிர்பார்க்கின்றனர். அது நீதியை கொன்று விடுகிறது. மொழி, அடையாளம் ஆகியவற்றால் பெருமை மிக்க தமிழர்கள், மொழிக்காக எப்போதும் முதலாவதாக வருவார்கள். விசாரணையை வழக்காடிகள் புரிந்து கொள்ளும்படி இருக்க வேண்டும். திருமணத்தில் ஓதப்படும் மந்திரங்களை போல விசாரணை புரிந்து கொள்ள முடியாததாக இருக்க கூடாது. நீதிமன்ற விசாரணைகளில் மாநில மொழிகளை பயன்படுத்துவதில் சில சிக்கல் உள்ள போதும், தற்போதைய தொழில்நுட்ப வசதிகளை  பயன்படுத்தி, உயர் நீதிமன்றங்களில் மாநில மொழிகளில் வழக்காடுவது குறித்து விரைவில் தீர்வு காணப்படும்.

நீதித்துறை காலியிடங்களை நிரப்புவதை பொறுத்துவரை 1,104 உயர் நீதிமன்ற நீதிபதி பணியிடங்களில் 388 காலியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளை கேட்டுக்கொள்கிறேன். வழக்குகள் எண்ணிக்கைக்கு ஏற்ப உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரிக்க வேண்டும். நீதித்துறை உள்கட்டமைப்புக்கு தேவையான நடவடிக்கைகளை தமிழக முதல்வர் எடுத்துவருவது பாராட்டுதற்குரியது. அவர்  வழக்கறிஞர்கள் நலனுக்காகவும் பாடுபடுகிறார். நீதித்துறையை பலப்படுத்த தமிழக முதல்வர் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி என்னிடம் தெரிவித்தார்.

‘ஆணும் பெண்ணும் ஓரென கொள்வதால் அறிவில் ஓங்கி தழைக்கும்’ என்ற பாரதியார் பாடியுள்ளார். (தமிழில் வாசித்தார்) நீதிபதி பதவிக்கு வர ஆண், பெண், இடம், இனம், மொழி உள்ளிட்ட எவையும் தடையாக இருக்க கூடாது. உச்ச நீதிமன்றத்தின் கிளையை தொடங்குவது குறித்து திமுக எம்.பி. பி.வில்சன், மாநிலங்களவையில் தனிநபர் மசோதா அறிமுகம் செய்துள்ளார். அதன் மீது மத்திய அரசு என்ன முடிவு எடுக்கப்போகிறது எனத் தெரியவில்லை என்ற போதும் உச்ச நீதிமன்றத்தை வழக்கறிஞர்கள் எளிதில் அணுக ஏதுவாக காணொலி காட்சி மூலம் வழக்குகளை தொடர்ந்து விசாரிப்பது என்று சக நீதிபதிகளுடன் கலந்து பேசி முடிவெடுத்துள்ளேன். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில், அனைவரையும் வரவேற்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி பேசினார். உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், சட்டக் கல்வி இயக்குநர் பதவி காலியாக உள்ளது. அந்த பணிக்கு தகுதியுள்ள மாவட்ட நீதிபதியை நியமிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Related Stories: