ஒன்றிய அமைச்சர் அமித்ஷா நாளை புதுச்சேரி வருகை: புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்

புதுச்சேரி: அரசு முறை பயணமாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை (24ம் தேதி) புதுச்சேரி வருகிறார். அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளின் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி காலை 9.30 மணியளவில் அவர் சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி விமானம் நிலையம் வருகிறார். அங்கிருந்து கார் மூலம் காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழகம் செல்லும் அமித்ஷா, அங்கு நடைபெறும் அரவிந்தரின் 150வது ஆண்டு விழாவில் பங்கேற்கிறார். அப்போது ரூ.48 கோடியில் கட்டப்பட உள்ள 3 கட்டிடங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். அங்கிருந்து 11.45க்கு காரில் புறப்படும் அவர், பாரதியார் நினைவு இல்லத்தை பார்வையிடுகிறார். அதைத் தொடர்ந்து 12.10க்கு அரவிந்தர் ஆசிரமம் செல்லும் அமித்ஷா அங்கு தரிசனம் செய்கிறார்.

பின்னர் கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு அமித்ஷாவை முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் சந்தித்து பேசுகின்றனர். பின்னர் மதியம் 1.55 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டு 2 மணிக்கு கம்பன் கலையரங்கத்துக்கு வந்து அங்கு நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். அப்போது இசிஆரில் ரூ.70 கோடியில் புதிய பஸ் நிலையம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் குமரகுருபள்ளத்தில் ரூ.45 கோடியில் 13 அடுக்குமாடி குடியிருப்பு, விழுப்புரம் - புதுச்சேரி நெடுஞ்சாலையை ரூ.30 கோடியில் அகலப்படுத்தும் பணிக்கு அடிக்கல் நாட்டுதல், மேலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 390 காவலர்களுக்கு பணி நியமன ஆணை உள்ளிட்டவற்றை அமித்ஷா வழங்குகிறார்.

பின்னர், 3.45 மணிக்கு சித்தானந்தா நகரிலுள்ள பாஜக அலுவலகம் செல்லும் அமித்ஷா, அங்கு அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார். பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக சென்னை சென்று அங்கிருந்து விமானத்தில் டெல்லி செல்கிறார். அமித்ஷாவின் வருகையையொட்டி புதுச்சேரியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதனிடையே அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கருப்புக் கொடி போராட்டம் அறிவித்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கையாக அவர்களை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

Related Stories: