தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டிற்கு ஒன்றிய அரசே காரணம்: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

கும்பகோணம்: தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு ஒன்றிய அரசே முழு காரணம் என்று குற்றம் சாட்டியுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி ஒன்றிய தொகுப்பில் இருந்து முறையாக நிலக்கரியை கொடுக்காதததால் தான் மின்வெட்டு ஏற்படுவதாக கூறியுள்ளார். கும்பகோணத்தில் காங்கிரஸ் அலுவலக கட்டிட திறப்பு விழாவில் பங்கேற்ற கே.எஸ்.அழகிரி பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்; மாநில அரசுகளுக்கு ஒதுக்க வேண்டிய நிலக்கரியை ஒன்றிய அரசு ஒதுக்காததே தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டுக்கு தலையாய காரணம் என்று கூறினார். இது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான அறிக்கை அளிக்க உள்ளதாக தெரிவித்த கே.எஸ்.அழகிரி 8 மணி நேரத்திற்கு தேவையான அளவு நிலக்கரி மட்டுமே தமிழ்நாட்டில் கையிருப்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

ஆளுநர் என்ற தனிப்பட்ட நபருக்காக கருப்புக்கொடி காட்டப்படவில்லை என்று தெரிவித்த அவர் நீட் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண கொண்டுவரப்பட்ட தீர்மானங்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருப்பதற்காகவே ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாகவும் தெரிவித்தார். அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக அரசுக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவும், முகலாய மன்னன் பெயரில் உள்ளதும் தான் டெல்லி ஜஹாங்கீர்புரியில் குடிசைகள் அகற்றப்பட்டதற்கான காரணம் என்றும் தெரிவித்தார்.

Related Stories: