ஊட்டியின் 200ம் ஆண்டை முன்னிட்டு ரூ.500 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும்-நீலகிரி எம்பி ராசா தகவல்

ஊட்டி :  ஊட்டியின் 200ம் ஆண்டை முன்னிட்டு ரூ.500 கோடியில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும் என நீலகிரி எம்பி ராசா தெரிவித்தார். ஊட்டி உதயமாகி 200 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இதை கொண்டாடும் வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடந்தது.

தமிழக வனத்துறை அமைச்சர் ராமசந்திரன். நீலகிரி எம்பி ராசா ஆகியோர் தலைமை வகித்தனர்.  கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். இதில், அமைச்சர் ராமசந்திரன் பேசியதாவது:

கடந்த 1822ம் ஆண்டு ஜூன் மாதம் ஜான் சலீவன் என்ற ஆங்கிலேய அதிகாரியால் முதன் முதலாக கண்டறியப்பட்டு கட்டமைக்கப்பட்டதே இன்றைய ஊட்டியாகும். தமிழக முதல்வர் 2022-23ம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடரில் ஊட்டியில் சிறப்பு திட்டங்கள் மற்றும் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் மேற்கொள்வதற்காக சிறப்பு நிதியாக ரூ.10 கோடி அறிவித்தமைக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசிற்கு   நன்றியை தெரிவித்து  கொள்கிறேன்.

 

சுற்றுலா பயணிகள் ஜான் சலீவனின் வாழ்க்கை வரலாற்றினை தெரிந்து கொள்ளும் வகையில், மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் புகைப்பட கண்காட்சி அரங்குகள் அமைக்கவும், ரூ.4 கோடி செலவில் வனத்துறை மூலம் கேத்ரின் நீர்வீழ்ச்சியினை மேம்படுத்தவும், கோத்தகிரி குயின் சோலையினை சுற்றுலா தலமாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து நீலகிரி எம்பி ராசா பேசியதாவது:

ஊட்டி உதயமாகி 200 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி 2022 ஜூன் மாதம் முதல் ஒரு வருட காலத்திற்கு பல்வேறு துறைகளின் சார்பில் வளர்ச்சிப்பணிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. புதிதாக இணையதளம் உருவாக்கப்பட்டு, அதில் ஜான்சலீவனின் வாழ்க்கை வரலாறு மற்றும் புகைப்படங்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் பதிவேற்றம் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மேலும், ஊட்டியில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தில் நிரந்தரமாக ஜான் சலீவனின் வாழ்க்கை வரலாற்று புகைப்படங்கள் இடம்பெற நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்துறை, வனத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை ஆகிய துறைகளின் மூலம் இந்த ஆண்டில் சுமார் ரூ.500 கோடி மதிப்பீட்டில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளன.

அதேபோல், பழமை வாய்ந்த கட்டிடத்தினை புதுப்பிக்க நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ஊட்டி உதயமாகி 200 ஆண்டுகள் கடந்த நிலையில் நடைபெறவுள்ள அனைத்து விதமாக நிகழ்ச்சிகளுக்கும் துறை அலுவலர்கள் ஓராண்டு காலம் நடைபெறும் விழாவினை வெற்றிகரமாக நிகழ்த்துவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, ஊட்டி 200 ஆண்டுகள் நிறைவடைவதையொட்டி புத்தகம் மற்றும் சின்னம், முத்திரைகள் வெளியிடுதல், கல்லூரி, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்துதல் குறித்தும், விளையாட்டுத்துறை சார்பில் போட்டிகள் நடத்தப்படுதல் ஆகியவை குறித்தும் கருத்துகள் கேட்கப்பட்டன. கூட்டத்தில் சிறப்பு பகுதி மேம்பாட்டுத் திட்ட இயக்குநர் மோனிகாரானா, முதுமலை கள இயக்குநர் வெங்கடேசன், மாவட்ட வன அலுவலர் சச்சின் போஸ்லே துக்காராம், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, நகராட்சி தலைவர் வாணீஷ்வரி, துணைத்தலைவர் ரவிக்குமார்,  ஊராட்சி ஒன்றியத்தலைவர் மாயன், முன்னாள் அரசு கொறடா முபாரக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: