தமிழ்நாட்டில் இதுவரை XE வேரியண்ட் கண்டறியப்படவில்லை... மக்கள் பதற்றமடைய வேண்டாம் : தமிழக சுகாதாரத்துறை!!

சென்னை : தமிழ்நாட்டில் இதுவரை XE வேரியண்ட் கண்டறியப்படவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் மருத்துவப் பணிகள் இயக்கத்தில் தடுப்பு மருந்து சேமிப்பு கிடங்கைப் பார்வையிட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,தமிழகத்தில் தொற்று பாதிப்பு விகிதம் குறைவாக தான் உள்ளது. தடுப்பூசி செலுத்துவதை விரிவுபடுத்த வேண்டும். அரசின் கையிருப்பில் 1.56 கோடி தடுப்பூசி உள்ளது. 1.46 கோடி பேர் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தவில்லை. டெல்லி போன்ற இடங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அந்த நிலைக்கு தமிழ்நாடு செல்லக்கூடாது என்பதற்காக தடுப்பூசி அனைவரும் செலுத்த வேண்டும்.

ஓமிக்ரான் பரவலின் போது, பாதிப்பு குறைவாக இருந்ததற்கு காரணம் தடுப்பூசி செலுத்தியது, எதற்கும் கவலைப்படாமல் மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். ராணுவம் போல மருத்துவ துறை செயல்பட வேண்டும். நோய் இல்லை என்பதற்காக தயார் இல்லாமல் இருக்கக் கூடாது. எதற்கும் எப்போதும் தயாராக இருக்க வேண்டும். தொற்று பூஜ்யம் என்பதைவிட, இறப்பு பூஜ்யம் என்பதே வெற்றி. உருமாறிய XE கொரோனா குறித்து கவலை கொள்ள வேண்டாம். மக்கள் பதற்றமடையும் சூழல் ஏதும் தற்போது இல்லை,என்றார்.

Related Stories: