ஊத்தங்கரையில் பரபரப்பு வட்டார கல்வி அலுவலகத்தில் 12,000 பாட புத்தகங்கள் மாயம்: 2 அலுவலர்கள் சஸ்பெண்ட்

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் வட்டார கல்வி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. ஊத்தங்கரை வட்டாரத்தில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5 வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு வழங்கும் பொருட்டு, மாவட்ட கல்வி அலுவலகத்தின் மூலம் பெறப்பட்ட விலையில்லா பாடப்புத்தகங்கள் கடந்த அக்டோபர் மாதம் பள்ளிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு மீதமுள்ள புத்தகங்கள் அலுவலக வளாகத்தில் உள்ள வகுப்பறை கட்டிடத்தில் வைத்து பூட்டப்பட்டது.

இந்நிலையில், புதியதாக மாதம்மாள் என்பவர் வட்டார கல்வி அலுவலராக பொறுப்பேற்றார். அவர் புத்தகங்கள் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது 12 ஆயிரத்துக்கும் அதிகமான புத்தகங்கள் காணாமல் போனது குறித்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தவுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, மாவட்ட கல்வி அலுவலர் மணிமேகலை உள்ளிட்ட பலரும் ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலகத்தில் கடந்த வாரத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது பதிவறை எழுத்தர் தங்கவேல்(40), திருநாவுக்கரசு(30) ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு, தொடர்ந்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பின்னர் பாடப்புத்தகங்கள் மாயமானது குறித்து மாதம்மாள் ஊத்தங்கரை போலீசில் புகாரளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து புத்தகங்கள் யாருக்கேனும் விற்பனை செய்யப்பட்டதா? என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஊத்தங்கரை வட்டார கல்வி அலுவலகத்தில் முன்பு பணியாற்றிய வட்டார கல்வி அலுவலர்கள் தற்போது உள்ள வட்டார கல்வி அலுவலர்கள், பதிவறை எழுத்தர், அலுவலக பணியாளர்கள் என 8 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: