தயார் நிலையில் தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை பாலியல் குற்றச் செயல்கள் குறித்த புகார்கள் மீதும் விரைந்து நடவடிக்கை: அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

சென்னை: சட்டப் பேரவையில் நேற்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் பி.கீதா ஜீவன் பதிலளித்து பேசியதாவது: தமிழகத்தில் முதன்முறையாக பெண்களுக்கான மாநில மகளிர் கொள்கையை உருவாக்கிட முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதற்காக பல்வேறு கருத்துப் பட்டறைகள் நடத்தப்பட்டு, கருத்துக்கள் தொகுக்கப்பட்டு தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கை வெளியிட தயார் நிலையில் உள்ளது.  

பாதிக்கப்பட்ட பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மையங்களில் 2018ம் ஆண்டு முதல் 2021 மார்ச் வரை பயன்பெற்றவர்கள் மொத்தம் 13,121 பேர். ஆனால் திமுக அரசு பொறுப்பேற்ற இந்த ஓராண்டு காலத்தில் 13,152 பேர் பயனடைந்துள்னர்.

பாலியல் குற்றச் செயல்கள் குறித்து அளிக்கப்படும் புகார்கள் மீதும், அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுத்திடவும் இத்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்டம்-ஒழுங்கு தொடர்பாக நடத்தும் ஒவ்வொரு ஆய்வுக் கூட்டத்திலும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை முதல்வர் கூராய்வு செய்கிறார். அது மட்டுமல்லாமல் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுத்திட இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என்றார்.

Related Stories: