தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் விக்கிரமராஜா நேரில் சந்திப்பு: திருச்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார்

சென்னை:தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு 39வது மாநில மாநாடு வருகிற 5ம் தேதி திருச்சியில் நடக்கிறது. இந்த மாநாட்டிற்கான அழைப்பிதழை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று நேரில் சந்தித்து பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். அப்போது மாநாட்டில் பங்கேற்குமாறு அவர் அழைப்பு விடுத்தார்.

தொடர்ந்து விக்கிரமராஜா அளித்த பேட்டி:

 திருச்சியில் நடைபெறும் மாநாட்டிற்கு 54 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு திடல் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் லட்சக்கணக்கில் வணிகர்கள் பங்கேற்க உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் உணவு, தங்கும் வசதி, குடிநீர், கழிப்பிட வசதிகள், வாகனங்களை நிறுத்தும் வசதி என அனைத்தும் தனித்தனியாக செய்யப்பட்டு வருகின்றன. 39வது தமிழக வணிகர் விடியல் மாநாடு மிகப்பெரிய திருப்புமுனை மாநாடாகவும், வணிகர்களின் துயர் துடைக்கும் மாநாடாகவும், வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் மாநாடாகவும் புதியதோர் விடியலை படைக்கும் என்ற உள்ளார்ந்த உணர்வுகளுடன் மாநாட்டினை சிறப்புடன் நடத்த அனைத்து ஏற்பாடுகளும் மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது.

 மாநாடு நடைபெறும் நாளான மே 5ம் தேதி வணிகர்கள் அனைவரும் கடைகளுக்கு விடுமுறை அளித்து மாநாட்டு திடலுக்கு குடும்பத்துடன் வருகை தந்து மாநாட்டை வெற்றி மாநாடாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: