சென்னையில் கடற்கரை சார்ந்த பொழுதுபோக்கு சுற்றுலா மையம்: அமைச்சர் முத்துசாமி அறிவிப்பு

பட்டினப்பாக்கத்தில், கடற்கரை சார்ந்த  பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா மையம் உருவாக்க தமிழ்நாடு வீட்டுவசதி  வாரியத்தால் உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் முத்துசாமி கூறினார். இதுகுறித்து சட்டப்பேரவையில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்த கொள்கை விளக்க புத்தகத்தில் கூறி இருப்பதாவது:

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி 311.05 ஏக்கர் நிலப்பரப்பில் திருமழிசையில் துணை நகரம் அமைக்கும் பணி தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக 123 ஏக்கர் பரப்பளவில் ரூ.245.70 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக இந்த நிதியாண்டில் மனைகள், வீடுகள் மற்றும் குடியிருப்புகள் உருவாக்கப்படும்.

மதுரை தோப்பூர் - உச்சப்பட்டியில் ஒருங்கிணைந்த துணை நகரம், மதுரை நகரின் விரிவாக்கப்பட்ட பகுதி மற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தின் அருகில் அமைந்துள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் 573.83 ஏக்கர் பரப்பளவில் ரூ.289.03 கோடி மதிப்பீட்டில் மனைகளை உருவாக்கியுள்ளது. மேம்பாட்டு பணிகள் முடிக்கப்பட்டு, நடப்பு நிதியாண்டில் 491 ஏக்கர் நிலப்பரப்பில் 6,580 மேம்படுத்தப்பட்ட மனைகள் விற்பனைக்கு தயாராக இருக்கும். அடுத்தகட்டமாக 82.83 ஏக்கர் நிலப்பரப்பில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.

மெரினா வணிக மையம் என்ற திட்டத்தை, பட்டினப்பாக்கத்தில், கடற்கரை சார்ந்த பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா மையமாக உருவாக்க தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் உத்தேசிக்கப்பட்டுள்ளது. விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. விரிவான தொழில்நுட்ப ஆய்வு, திட்டம் செயல்படுத்தும் முறை மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவை நடப்பு நிதியாண்டில் இறுதிசெய்யப்படும்.

சென்னை நந்தனத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய தலைமை அலுவலக இடம் மற்றும் ஈ.வெ.ரா. மாளிகை இடத்தில் வர்த்தக மையம் ஏற்படுத்தப்படும். மனை மற்றும் குடியிருப்புகளை விற்பனை செய்ய விரும்பும் ரியல் எஸ்டேட் முகவர்கள் கட்டிடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்திருக்க வேண்டும். இந்த நிதியாண்டில் தொடக்க கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களுக்கு நகைக்கடன் வழங்குவதற்கு ரூ.100 கோடி கடன் வழங்க நடவடிக்கையும், சங்க உறுப்பினர்களுக்கு ரூ.500 கோடி அளவுக்கு உரிய நேரத்தில் வீட்டு கடன்கள் மற்றும் அடமான கடன்கள் வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் நெரிசலை குறைக்கும் வகையில், கிளாம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கத்தில் மேலும் 2 புதிய பஸ் முனையங்கள் அமைக்க முன்மொழியப்பட்டது. இந்த 2 பஸ் முனையங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகின்றது. கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் புதிய புறநகர் பஸ் முனையம் கட்டி முடிக்கப்பட்டு, தெற்கு நோக்கி செல்லும் பஸ் வழித்தடங்கள் வரும் செப்டம்பர் மாதம்  முதல் இயக்கப்படும்.

மேற்கு நோக்கி செல்லும் பஸ்களுக்காக குத்தம்பாக்கத்தில் ரூ.336 கோடி செலவில் ஒரு புதிய புறநகர் பஸ் நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பஸ் முனையத்தின் கட்டுமான பணிகள் கட்டி முடிக்கப்பட்டு வரும் அக்டோபர் மாதம் பயன்பாட்டிற்கு வரும்.

Related Stories: