அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட ஓஎம்ஆர் புறவழிச்சாலைப்பணி மீண்டும் வேகமெடுக்கிறது

திருப்போரூர்: பழைய மாமல்லபுரம் சாலை எனப்படும் ராஜிவ்காந்தி சாலை சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் இருந்து சிறுசேரி சிப்காட் வரை 6 வழிப்பாதையாக உள்ளது. சிறுசேரியில் இருந்து பூஞ்சேரி வரை நான்கு வழிப்பாதையாக உள்ளது. இந்த சாலையில் படூர், கேளம்பாக்கம் பகுதியிலும், திருப்போரூர் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. படூர்-தையூர் இடையே ஒரு புறவழிச்சாலையும், திருப்போரூர்-ஆலத்தூர் இடையே ஒரு புறவழிச்சாலையும் அமைக்க முடிவு செய்யப்பட்டது. படூர்-தையூர் இடையிலான புறவழிச்சாலை 4.67 கி.மீ தூரத்திற்கும்,  திருப்போரூர்-ஆலத்தூர் இடையிலான புறவழிச்சாலை 7.45 கி.மீ தூரத்திற்கும் போடப்படுகிறது.

இரண்டு புறவழிச்சாலைகளுக்கும் மொத்த திட்டச்செலவாக 465 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு இந்த சாலை அமைக்க படூர், கழிப்பட்டூர், கேளம்பாக்கம், தையூர், காலவாக்கம், கண்ணகப்பட்டு, திருப்போரூர், தண்டலம், ஆலத்தூர், வெங்களேரி உள்ளிட்ட 13 கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்டு எல்லைக்கற்கள் நடப்பட்டது. இதையடுத்து முதற்கட்டமாக படூர், கேளம்பாக்கம் பகுதிகளில் புறவழிச்சாலை அமைக்கும் பணி தொடங்கி நடந்து வந்தது. புறவழிச்சாலையில் குறுக்கே கேளம்பாக்கம்-கோவளம் சாலை வருவதால் அங்கு உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்படுகிறது.

தற்போது பாலப்பணிகள் முடிந்து விட்ட நிலையில், புறவழிச்சாலையை பாலத்துடன் இணைக்கும் பணிகள் தொடங்கப்படவில்லை. இதுபோன்று கேளம்பாக்கத்தில் இருந்து தையூர் வரை இன்னும் புறவழிச்சாலை பணிகள் தொடங்கிய நிலையிலேயே உள்ளன. பணிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு புறவழிச்சாலையான ஓஎம்ஆர் சாலையுடன் தையூர்-செங்கண்மால் பகுதியில் இணைக்கப்படவேண்டும். இதனால் 75 சதவீத சாலைப்பணி முடிந்தும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இந்நிலையில் திமுக ஆட்சி ஏற்பட்டதும் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டு பாதியில் நிற்கும் சாலை மற்றும் பாலப்பணிகளை விரைந்து முடிக்க முதல்வர் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு ஓஎம்ஆர் சாலையை பார்வையிட்டு படூர் மற்றும் திருப்போரூர் ஆகிய இரு புறவழிச்சாலை களையும் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர உத்தரவிட்டார். தற்போது காலவாக்கம், திருப்போரூர் பகுதியில் அமைக்கப்பட்டு வரும் புறவழிச்சாலை பணிகளில் 50 சதவீதம் முடிந்துள்ளது. காலவாக்கம் பகுதியில் 1 கிமீ தூரத்திற்கும், திருப்போரூர் மற்றும் தண்டலம், வெங்களேரி பகுதிகளில் 3 கி.மீ தூரத்திற்கும் புறவழிச்சாலையை அமைக்கும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே, கையகப்படுத்திய நிலங்களில் கற்கள் நடப்பட்டு சாலை அமைக்க முதற்கட்டமாக மண் கொட்டும் பணி தொடங்கி உள்ளது. இதன் மூலம் காலவாக்கம் மற்றும் ஆலத்தூர் இடையே திருப்போரூர் வழியாக போடப்படும் புறவழிச்சாலைப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு ஓஎம்ஆர் சாலையுடன் இணைத்து மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என நெடுஞ் சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: