பக்கிங்காம் கால்வாயை அரசு மீட்க வேண்டும்: ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வரை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட பக்கிங்காம் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி 2014ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது கால்வாய்க்குள்ளும், கரையிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும், ஆக்கிரமித்தவர்களுக்கு மறுவாழ்வு திட்டங்களை வகுக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்துக்கு உதவியாக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ரகுநாதன் தெரிவித்தார்.

 வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஆக்கிரமிப்பாளர்களுக்கு மறுவாழ்வு வழங்குவது என்பது, ஆக்கிரமிப்பை ஊக்குவிப்பது போன்றது. ஆந்திராவில் இருந்து புதுச்சேரி வரை உள்நாட்டு நீர்வழித்தடமாக இருந்த பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்புகளால் முழுவதுமாக மோசமடைந்துள்ளது. ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி அதனை பழையபடி மீட்டெடுக்க வேண்டும். பக்கிங்காம் கால்வாயை அழகுபடுத்தும் போது, நகரமும் அழகாகும். அதை தொடர்ந்து பராமரிப்பதில் மக்களுக்கும் பங்கு உள்ளது. தமிழகத்தில் பாரம்பரியங்கள் அதிகம் உள்ளது பெருமைப்படக்கூடியது. அவற்றை காக்க வேண்டும் என்றனர். நீர்நிலை ஆக்கிரமிப்புகள் தொடர்பான வழக்குகள் நாளை (இன்று) விசாரணைக்கு வர உள்ளதால், இந்த வழக்கையும், அவற்றுடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்ற அரசுத்தரப்பு கோரிக்கையை ஏற்று விசாரணையை நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Related Stories: