திருவாலங்காடு அருகே மாகாளி அம்மன் கோயில் தீமிதி திருவிழா: 200 பக்தர்கள் தீக்குண்டம் இறங்கினர்

திருத்தணி: திருவாலங்காடு அருகே மாகாளி அம்மன் கோயில் தீமிதி திருவிழா விமரிசையாக நடந்தது. 200 பக்தர்கள் தீக்குண்டம் இறங்கினர். திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் அடுத்த குப்பம்கண்டிகையில் செங்கழுனீர் மாகாளி அம்மன் கோயிலில் நேற்று தீமிதி திருவிழா விமரிசையாக நடந்தது. இந்த திருவிழா கடந்த 8ம் தேதி தொடங்கியது. 10 நாட்கள் அம்மன் வீதியுலா புறப்பாடு நடந்தது. காப்பு கட்டி விரதம் இருந்த பெண் பக்தர்கள், நேற்று காலை 11 மணியளவில் பால்குடம் சுமந்து ஊர்வலமாக வந்தனர். பகல் 1.30 மணிக்கு மஹா அபிஷேகம், ஆராதனை மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.

மாலை 6 மணிக்கு காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் சுமார் 200 பேர், தீக்குண்டம் இறங்கினர். விழாவில், குப்பம் கண்டிகை சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் அம்மனை வழிபட்டு சென்றனர். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் எம்பி திருத்தணி கோ.அரி, மாநில தமிழ் வளர்ச்சி இயக்குனர் முனைவர் விஜயராகவன், திருவாலங்காடு ஒன்றிய குழு தலைவர் ஜீவா விஜயராகவன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: