அத்திமாஞ்சேரிப்பேட்டையில் திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா: திரளான பக்தர்கள் பங்கேற்பு

பள்ளிப்பட்டு: அத்திமாஞ்சேரிபேட்டையில் திரவுபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பள்ளிப்பட்டு அடுத்த அத்திமாஞ்சேரிப்பேட்டையில் கொரோனா பரவல் காரணமாக நிறுத்தப்பட்ட திரவுபதி அம்மன் ஆலய தீமிதி திருவிழா இந்த ஆண்டு கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெற்ற திருவிழாவில் பகல் நேரங்களில் மகாபாரத சொற்பொழிவும், இரவு நேரங்களில் தெருக்கூத்தும் நடைபெற்று வந்தன.

விழாவில், முக்கிய நிகழ்ச்சியான தீமித்திருவிழா நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது. இதில் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். மாலை பெரும் திரளான பக்தர்கள் திருக்கோயில் முன் குவிந்தனர். காப்பு கட்டிய பக்தர்கள் பூங்கரகத்துடன் ஊர்வலமாக வந்து அக்னி குண்டத்திற்கும் முன் குவிந்தனர். இரவு 8 மணியளவில் குண்டத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 500க்கும் மேற்பட்ட பக்தர்கள்  பக்தி பரவசத்துடன் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பொதட்டூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராக்கிகுமாரி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

Related Stories: