இளைஞர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் நலன்கருதி செங்கல்பட்டில் உள் விளையாட்டு அரங்கம்: பேரவையில் வரலட்சுமி எம்எல்ஏ வலியுறுத்தல்

சென்னை: சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது செங்கல்பட்டு தொகுதி எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன்(திமுக) பேசியதாவது: செங்கல்பட்டு தொகுதி  காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், ஒழலூர் கிராம ஊராட்சியில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்களும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் இருக்கிறார்கள். இவர்கள் வாலிபால், கிரிக்கெட், இறகுபந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், பல்வேறு போட்டிகளில் கலந்துகொள்கிறார்கள். இவர்களில் பெரும்பாலானோர் வறுமைக்கோட்டிற்குக்கீழே இருப்பதால், பணம் செலுத்தி தனியார் உடற்பயிற்சி நிலையங்களுக்குச் செலுத்த முடியாத நிலை உள்ளது. எனவே இங்கு அனைத்து உபகரணங்களுடன்கூடிய நவீன உடற்பயிற்சிக் கூடத்தை அமைத்து தர வேண்டும் என்றார்.

இதற்கு பதில் அளித்து அமைச்சர் சி.வி.மெய்யநாதன் பேசுகையில், ‘‘ஒழலூர் கிராம ஊராட்சியில், விளையாட்டு வீரர்களின் நலனைக் கருத்தில்கொண்டு, நிதிநிலைக்கேற்ப,  முதல்வரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, விரைவில் இந்த ஆண்டு தேவையான உடற்பயிற்சி உபகரணங்கள் வழங்கப்பட்டு, உடற்பயிற்சிக் கூடம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். வரலட்சுமி மதுசூதனன்: செங்கல்பட்டு மாவட்டம் புதிய மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ளதால், அங்கு மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைப்பதாக அமைச்சர் கூறியிருக்கின்றார். எனவே, இளைஞர்களின் நலனைக் கருதி, அந்த விளையாட்டு அரங்கத்தினை  அமைக்க அனுமதியும், நிதி ஒதுக்கிடும் செய்து தருமாறு அமைச்சரை கேட்டுக்கொள்கிறேன். அங்கு ஓர் உள் விளையட்டு அரங்கத்தினையும் அமைத்து தர வேண்டும். அதற்காக 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அவ்வாறு விளையாட்டு அரங்கம் அமைத்து தரும்பட்சத்தில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கென மாவட்ட விளையாட்டு அலுவலர் மற்றும் அனைத்து விளையாட்டுகளுக்கும் தேவையான பயிற்றுநர்களையும் நியமனம் செய்து தர வேண்டும்.

அமைச்சர் சி.வி.மெய்யநாதன்: செங்கல்பட்டு மாவட்டத்திற்கான புதிய விளையாட்டு அலுவலர் நியமனத்திற்கான நடவடிக்கை மேற்கொள்வதோடு, உறுப்பினர் ஒரு உள் விளையாட்டு அரங்கம் வேண்டும்  என்று கோரிக்கை விடுத்திருக்கிறார். முதல்வர் சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மினி உள்விளையாட்டு அரங்கம்  அமைக்கப்படும் என்கின்ற அறிவிப்பை தந்திருக்கிறார். அதன் அடிப்படையில்,  உறுப்பினர் கோரியிருக்கின்ற அந்த இடத்தில், தேவைக்கேற்ப 6 முதல் 7 ஏக்கர்  இடம் இருப்பின், அதற்கான இடத்தினை ஆய்வு செய்து, மாவட்ட ஆட்சி தலைவரின் கருத்துரு பெறப்பட்டு, அந்தப் பகுதியில் மினி உள்விளையாட்டு அரங்கம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: