மேகாலயாவில் கார் விபத்தில் உயிரிழந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா உடல் சென்னை வந்தது

சென்னை: மேகாலயாவில் கார் விபத்தில் உயிரிழந்த தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா உடல் விமானத்தில் சென்னை வந்தது. 83வதுதேசிய டேபிள் டென்னிஸ் போட்டி நேற்று மேகாலயா மாநிலம் ஷில்லாங்கில் தொடங்கியது. இதில் தமிழகத்தின் சார்பில் கலந்துகொள்ள தமிழக வீரர்களான சென்னை அண்ணா நகரை சேர்ந்த விஸ்வா தீனதயாளன் (18), ரமேஷ் சந்தோஷ்குமார், அபினாஷ் பிரசன்னா, சீனிவாசன், கிஷோர்குமார் ஆகியோர் நேற்று சென்னையிலிருந்து பயணிகள் விமானத்தில் அசாம் மாநிலம் கவுகாத்தி சென்றனர். அங்கிருந்து போட்டி நடைபெறும் மேகாலயா மாநிலம் ஷில்லாங்கிற்கு வாடகை காரில் பயணம் செய்து கொண்டிருந்தனர். அந்த பாதை மலை பள்ளத்தாக்குகள் நிறைந்த பகுதியாகும்.

மலைப்பாதையில் சென்றபோது, உம்லி சோதனைச்சாவடி அருகே ஷாங்பங்லா பகுதியில் டிரெய்லர் லாரி ஒன்று கார் மீது மோதியது. இதில் விஸ்வா பயணம் செய்த கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் வாடகை கார் டிரைவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஸ்வா மற்றும் அவருடன் பயணம் செய்த வீரர்கள் ரமேஷ் சந்தோஷ்குமார், அபினாஷ் பிரசன்னா, சீனிவாசன், கிஷோர்குமார் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து உடனடியாக அவர்களை மீட்டு அங்குள்ள நோங்போ சிவில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே விஸ்வா பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற வீரர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே டென்னிஸ் போட்டியை நடத்தும் அமைப்பாளர்கள் மேகாலயா அரசாங்கத்தின் உதவியுடன் காயமடைந்த வீரர்கள் 3 பேரையும் ஷில்லாங்கில் உள்ள இந்திரா காந்தி பிராந்திய சுகாதார மற்றும் மருத்துவ அறிவியல் சுகாதார நிறுவனத்திற்கு மேல் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

விஸ்வாவின் உடல் அங்குள்ள மருத்துவமனையில் என்ஃபோர்ம் செய்யப்பட்டு நேற்று அசாம் மாநிலம் கவுகாத்திக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மூலம், சென்னைக்கு பகல் 11.50 மணிக்கு வந்து சேர்ந்தது. சென்னை விமான நிலையத்தில் தமிழக அரசு அதிகாரிகள், தமிழ்நாடு டேபிள் டென்னிஸ் விளையாட்டு சங்கத்தினர் மற்றும் விஸ்வாவின் குடும்பத்தினர் உடலை பெற்றுக்கொண்டனர். விஸ்வா உடல் சென்னை அண்ணாநகரில் உள்ள வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது. உயிரிழந்த விஸ்வா, ஏப்ரல் 27 முதல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் சர்வதேச போட்டியில் கலந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்துள்ளார். விஸ்வா லயோலா கல்லூரியில் பிகாம் மாணவன். டெஹ்ரானில் நடந்த தேசிய தரவரிசை போட்டியின்போது 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான பட்டத்தை இந்தியாவுக்கு பெற்று தந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

* அமைச்சர் மெய்யநாதன் நேரில் அஞ்சலி

டேபிள் டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் மறைவை யொட்டி சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மறைந்த டென்னிஸ் வீரர் விஷ்வா தீனதயாளன் இல்லத்திற்கு நேற்று நேரில் சென்று தமிழக அரசு சார்பில் அஞ்சலி செலுத்தினார். அப்போது, அண்ணாநகர் எம்எல்ஏ எம்.கே.மோகன், தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் முதன்மை செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஆனந்தகுமார் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினார்.

Related Stories: