தொடர் விடுமுறை முடிந்து சென்னை நோக்கி படையெடுத்த வாகனங்கள்

சென்னை: தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி உள்பட 4 நாள் தொடர்ந்து அரசு விடுமுறை விடப்பட்டது. எனவே, இப்பண்டிகைகளை சொந்த ஊரில் கொண்டாடுவதற்காக, ஏராளமானோர் சென்னையில் இருந்து, சொந்த ஊருக்கு பஸ், ரயில்களில் சென்றனர். சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள், சென்னை திரும்புவதற்கு வசதியாக நேற்று முன் தினம் முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. 4 நாள் விடுமுறையை கழித்து விட்டு ஏராளமானோர் நேற்று முன்தினம் இரவு முதல் சென்னைக்கு திரும்ப தொடங்கினர். இதனால், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை 9 மணி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து சென்றது. நேற்று காலை வாகனங்களில் சென்னைக்கு திரும்புவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. செங்கல்பட்டில் இருந்து வண்டலூர் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அனைத்து வாகனங்களும் குறுகிய பாதையில் ஊர்ந்து சென்றது. இதனால் செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி பகுதிகளில் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.

Related Stories: