கன்டெய்னர் லாரி பழுதாகி நின்றதால் திம்பம் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு: அணிவகுத்து நின்ற வாகனங்கள்

சத்தியமங்கலம்: திம்பம் மலைப்பாதையில் கன்டெய்னர் லாரி பழுதாகி நகர முடியாமல் நின்றதால், தமிழகம்- கர்நாடகா இடையோ போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் திண்டுக்கல் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இந்த மலைப்பாதை வழியாக கனரக வாகனங்கள் மற்றும் அதிவேகமாக செல்லும் வாகனங்களால் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு மற்றும் வனவிலங்குகள் அடிபட்டு உயிரிழப்பதால், சென்னை உயர்நீதிமன்றம் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து இரவு நேர போக்குவரத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இன்று காலை கோவையில் இருந்து மைசூர் செல்வதற்காக திம்பம் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரி திம்பம் மலைப்பாதை 9வது கொண்டை ஊசி வளைவில் பழுதாகி நகர முடியாமல் நின்றது. இதன் காரணமாக மலைப்பாதையில் மற்ற வாகனங்கள் செல்ல முடியாமல் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக நீளம் கொண்ட கன்டெய்னர் லாரிகளை திம்பம் மலைப்பாதையில் அனுமதிக்கக்கூடாது என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது லாரி பழுது நீக்கும் பணி நடந்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம்- கர்நாடகா மாநிலங்களுக்கிடையே ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: