தொடர் விடுமுறையால் சொந்த ஊர் சென்று திரும்பியபோது சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்: வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் பயணிகள் அவதி

சென்னை: தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி, மதுரையில் சித்திரை திருவிழா போன்ற சிறப்பு தினங்களையொட்டி 4 நாட்கள் தொடர்ந்து அரசு விடுமுறை விடப்பட்டது. இதனால் சொந்த ஊருக்கு பஸ், ரயில்களில் ஏராளமானோர் சென்றனர். வழக்கமான ரயில்கள் மட்டுமின்றி சிறப்பு ரயில்களும் நிரம்பியதால் மக்கள் அரசு பஸ்களில் பயணித்தனர். அதே நேரத்தில் தொடர் விடுமுறை கூட்டத்தை சமாளிக்க அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி, மதுரை, சேலம், ஓசூர், திருவண்ணாமலை, வேலூர், ராணிபேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் வெளியூர் சென்றவர்கள், சென்னை திரும்புவதற்கு வசதியாக நேற்று முதல் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. அதன்படி 4 நாட்கள் விடுமுறையை கழித்து விட்டு ஏராளமானோர் நேற்றிரவு முதல் சென்னைக்கு திரும்ப தொடங்கினர்.

இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு முதல் இன்று காலை 9 மணிவரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து சென்றது. இன்று காலையில் வாகனங்களின் சென்னைக்கு திரும்புவோர் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. இதனால் நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன. குறிப்பாக தென்மாவட்டங்களில் இருந்து அரசு பஸ்கள், ஆம்னி பஸ்கள் மற்றும் கார்களில் ஏராளமானோர் வந்தனர்.

அவர்கள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டனர். மேலும், செங்கல்பட்டில் இருந்து வண்டலூர் சாலை விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இதனால் அனைத்து வாகனங்களும் குறுகிய பாதையில் ஊர்ந்து சென்றது. இதனால் செங்கல்பட்டு, மறைமலைநகர், கூடுவாஞ்சேரி பகுதிகளில் போக்குவரத்தை சீரமைக்கும் பணிகளில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். பெருங்களத்தூர், தாம்பரம் பகுதியில் கடுமையான நெரிசல் ஏற்பட்டது. நீண்ட தூரத்துக்கு வாகனங்கள் தத்தளித்தபடி சென்றது.

கோயம்பேட்டிலும் நெரிசல் அதிகமாக இருந்ததை காண முடிந்தது. இதனால் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

Related Stories: