தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது. வடதமிழக கடலோர பகுதிகளில் மேல்நிலவக் கூடிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மட்டம் வெப்பச்சலனத்தின் காரணமாக இன்றைய தினம் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், குறிப்பாக தென்தமிழக கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களாக இருக்கக்கூடிய நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, சேலம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாளை தென்தமிழகம், நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல், தருமபுரி, திருச்சி, காரைக்கால் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தகவல் தெரிவித்துள்ளது. இவ்வாறாக, வருகின்ற 22-ம் தேதி வரை தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டது. சென்னையை பொறுத்தமட்டில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸிலும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸிலும் இயக்கும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக, கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளதாக வானிலை மையம் தெரிவித்தது.

Related Stories: