தேனியில் சேதமடைந்த பஸ்நிலைய மேற்கூரை: பயணிகளுக்கு விபத்து அபாயம்

தேனி: தேனி புதிய பஸ்நிலையத்தில், பஸ்கள் நிற்குமிடத்தில் உள்ள மேற்கூரை சேதமடைந்திருப்பதால் பயணிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.தேனி பைபாஸ் சாலையில் புதிய பேருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து அனைத்து ஊர்களுக்கும் பஸ்கள் சென்று வருகின்றன. இதனால், பஸ்நிலையத்தில் பயணிகள் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும்.இப்புதிய பஸ்நிலையத்தில் பஸ்கள் நிற்க மூன்று தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம் மூன்றுத் தடங்களிலும் பஸ்கள் வந்து நிற்கும் இடத்தில் மழைநீர், வெயில் தாக்கம் இல்லாமல் இருக்க மேற்கூரை பிளாஸ்டிக் சீட்டுகளால் அமைக்கப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு இப்புதிய பஸ் ஸ்டாண்டு திறக்கப்பட்டது.

அப்போது போடப்பட்ட பிளாஸ்டிக் சீட்டுகளாலான மேற்கூரை வெயில் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு, ஆங்காங்கே பிட்டிங்களில் இருந்து கழன்று கீழே விழுகிறது. இக்கூரைகள் கீழே விழும்போது, பயணிகள் மீது விழுகிறது. அப்போது பயணிகளின் தலையில் செங்குத்தாக விழுந்தால், தலையில் காயம் ஏற்படும் அபாயம் உள்ளது.தற்போது கோடை மழைகாலம் துவங்கியுள்ளது. இதனால், பஸ்நிலையம் வரும் பயணிகள் பஸ்கள் நிற்கும் இடத்தில் மழையில் நனையாமல் வந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம், பஸ்நிலையத்தில் சேதமடைந்துள்ள மேற்கூரைகளை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Stories: