இந்திய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழக வீரர்கள்: விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் வாழ்த்து

சென்னை: சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்ட அறிக்கை: 12வது இந்திய சீனியர் ஆண்கள் ஹாக்கி போட்டிகள் மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் கடந்த 6ம் தேதி முதல் நடைபெற்றது. இதில் 27 மாநில அணிகள் கலந்து கொண்டு விளையாடின. நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அணிகள் மோதின. தமிழ்நாடு அணி கர்நாடக அணியை 3 - 0 என்ற கோல் கணக்கில் வென்றது. 22 ஆண்டுகளுக்குப் பின் தமிழ்நாடு அணி இறுதி ஆட்டத்தில் பங்கு பெற்றது குறிப்பிடத்தக்கது.

நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி அரியானா அணியை எதிர் கொண்டு விளையாடியது. இந்தப் போட்டியில் தமிழ்நாடு அணி மற்றும் அரியானா அணிகள் தலா ஒரு கோல் அடித்து சம நிலையில் இருந்ததால்  இறுதியில் டை பிரேக்கர் நடைபெற்றது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் அரியானா அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது. தமிழ்நாடு அணி இரண்டாம் இடம் பெற்றது. வெள்ளிப்பதக்கம் வென்ற தமிழ்நாடு அணி வீரர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அணியின் வெற்றிக்காக உழைத்த கேப்டன் ஷியாம் குமார், பயிற்சியாளர் சார்லஸ் டிக்சன், அணி மேலாளர் முத்துகுமரன் மற்றும் தமிழ்நாடு ஹாக்கி சங்கத் தலைவர் சேகர் மனோகரன் ஆகியோருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related Stories: