திருவண்ணாமலையில் 2வது நாளாக சித்ரா பவுர்ணமி கிரிவலம்: கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம்; சிறப்பு ரயில்கள் இயக்காததால் பக்தர்கள் தவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரசித்தி பெற்ற சித்ரா பவுர்ணமி விழா விமரிசையாக நடந்தது. அதையொட்டி, கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று முன்தினம் அதிகாலை 2.23 மணிக்கு தொடங்கி, நேற்று அதிகாலை 1.17 மணிக்கு நிறைவடைந்தது. எனவே, நேற்று முன்தினம் அதிகாலை தொடங்கி, இரவு முழுவதும் விடிய, விடிய சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்றனர். நள்ளிரவில் திடீரென மழை பெய்தது. அதையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல அனுமதிக்கப்பட்டதால், வழக்கத்தைவிட அதிகமான பக்தர்கள் திரண்டனர்.

மேலும், கிரிவலம் செல்ல உகந்த நேரம் நேற்று அதிகாலை 1.17 மணிக்கு முடிந்த நிலையிலும், 2வது நாளாக நேற்று காலை 11 மணி வரை பக்தர்கள் கிரிவலம் சென்றனர். எனவே, அண்ணாமலையார் கோயிலிலும் தரிசனத்துக்காக நேற்றும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தைவிட நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்திருந்தது. எனவே, நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர். இந்நிலையில், சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 2,800 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அதேசமயம் சித்ரா பவுர்ணமி சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே நிர்வாகம் இயக்கவில்லை.

குறிப்பாக, திருவண்ணாமலை- சென்னைக்கு நேரடி சிறப்பு ரயில் விழுப்புரம் மற்றும் காட்பாடி வழித்தடங்களில் இயக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால், எந்த ஒரு சிறப்பு ரயிலையும் இயக்கவில்லை. இந்நிலையில், வழக்கமாக இயக்கப்படும் தினசரி எக்ஸ்பிரஸ் ரயிலான விழுப்புரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் நேற்று காலை 6.30 மணிக்கு திருவண்ணாமலை ரயில் நிலையம் வந்தது. அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ரயிலில் ஏற அலைமோதினர். கூட்ட நெரிசல் அதிகரித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் ரயில் பெட்டிகளில் ஏற முடியாமல் தவித்தனர். ஏராளமான பக்தர்கள் மீண்டும் பஸ் நிலையங்களை நோக்கிச் சென்றது பரிதாபமாக இருந்தது.

Related Stories: