சென்னை மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் பதவிக்கு மாவட்ட தலைவர்கள் 3 பேரிடையே கடும் போட்டி: ஒரு வாரத்தில் கே.எஸ்.அழகிரி அறிவிக்கிறார்

சென்னை: தேர்தல் என்று வந்து விட்டாலே காங்கிரஸ் கட்சியில் முட்டல் மோதல் இருப்பது வழக்கமான ஒன்றுதான். அது எந்த தேர்தலாக இருந்தாலும் முடிவு அறிவிக்கும் வரை ஒரு வித எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் நிலவுவது வழக்கம். அந்த வகையில் தற்போது, சென்னை மாநகராட்சி தேர்தலில் காங்கிரசுக்கு 14 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 4 பேர் மாவட்ட தலைவர்களாக பதவி வகித்து வருபவர்கள்.சென்னை மாநகராட்சியில் மண்டல தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள் தேர்வு நடந்து முடிந்துவிட்டது. அடுத்ததாக மன்றத்தில் கட்சிகளின் தலைவர்களை அந்தந்த கட்சியின் மாநில தலைவர் தேர்வு செய்து அறிவிப்பார். திமுக உள்ளிட்ட கட்சிகள் தங்களுக்கான தலைவர்களை அறிவித்து விட்டன. அதை தொடர்ந்து சென்னை மாநகராட்சி கூட்டம் நடத்தப்பட்டு இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது.

இந்நிலையில், 14 உறுப்பினர்களை கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் சென்னை மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் பதவி அறிவிக்கப்படவில்லை. அடுத்தடுத்து கூட்டங்கள் நடைபெற உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களை ஒருங்கிணைத்து கொண்டு செல்வதற்கு தலைவர் பதவி என்பது முக்கியம் என்பதால், தலைவர் பதவியை தேர்வு செய்வதில் காங்கிரஸ் தலைமை தீவிரம் காட்டி வருகிறது.  இப்பதவியை, தமிழக காங்கிரஸ் தலைவர் தேர்வு செய்வதற்கு முழு அதிகாரம் உள்ளதால் அவரது முடிவுபடி தான் இந்த தலைவர் பதவி அறிவிக்கப்படும். இந்நிலையில், தலைவர் பதவியை பிடிக்க கவுன்சிலர்களாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் மாவட்ட தலைவர்களான எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், நாஞ்சில் பிரசாத் ஆகியோரிடையே கடும் போட்டி எழுந்துள்ளது.

  இவர்கள் இந்த பதவியை தங்களுக்கு வழங்கும்படி மாநில தலைவருக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். இதனால் யாருக்கு வழங்குவது என்று முடிவெடுக்க முடியாமல் காங்கிரஸ் தலைமை உள்ளதாக கூறப்படுகிறது. ஆனாலும் இன்னும் ஒரு வாரத்துக்குள் சென்னை மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் பதவி அறிவிக்கப்படும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 இந்த 3 மாவட்ட தலைவர்களில், பதவியை யாருக்கு கொடுத்தாலும் மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தி உருவாகும் என்று காங்கிரஸ் தலைமை கருதுவதாக கூறப்படுகிறது. இதனால் கட்சியில் சீனியாரிட்டி, அனுபவம், கட்சியினரை வழிநடத்தும் திறமை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த பதவியை வழங்க காங்கிரஸ் தலைமை ஆலோசித்து வருகிறது. இந்த பதவிக்கு வருபவர்களுக்கு ரிப்பன் மாளிகையில் அலுவலக அறை ஒதுக்கப்படும். எனவே கவுரவமான இந்த பதவியை கைப்பற்ற 3 மாவட்ட தலைவர்களும் முட்டி மோதி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories: