கிறிஸ்தவர்களின் 40 நாட்கள் தவ காலத்துக்கு பிறகு இன்று ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டம்: அனைத்து ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடு

சென்னை: இயேசு சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டு 3ம் நாள் உயிர்த்தெழும்  நாளான ஈஸ்டர் பண்டிகை உலகெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது.பாவிகளுக்காக இயேசு  கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு கொலை செய்யப்படுவதற்கு முன்பு அவர் 40  நாட்கள் வனாந்திரத்தில் நோன்பு இருந்தார். இதை நினைவு கூறும் வகையில் உலகம்  முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் சாம்பல் புதன் நாளிலிருந்து 40 நாட்கள்  தவக்காலம் கடைபிடிப்பார்கள். இதன் அடுத்த நிகழ்வாக ஈஸ்டர்  திருநாளுக்கு முந்தைய வெள்ளிக்கிழமை புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது.  அன்றுதான் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு கொல்லப்படும் நாளாகும்.  துக்கதினமான இந்த தினத்தில் கிறிஸ்தவர்கள் முழு நோன்பு கடைபிடிப்பார்கள்.  அதன் பிறகு 3ம் நாள் இயேசு உயிர்த்தெழும் நாளை ஈஸ்டர் திருநாளாக கொண்டாடுவார்கள்.

  இந்த  ஈஸ்டர் பண்டிகை இன்று உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால்  கொண்டாடப்படுகிறது. இது ஒரு ஈகை திருநாளாகும். மற்றவர்களுக்கு உதவும்  நாளாகும். ஈஸ்டர் பண்டிகையையொட்டி நேற்று நள்ளிரவு முதல் ஆலயங்களில்  ஆடம்பர திருப்பலிகளும், ஆராதனைகளும் நடைபெற்று வருகிறது. இரவு நிகழ்ச்சிகளில் கிறிஸ்தவர்கள் புத்தாடை  அணிந்து ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர். இன்று ஈஸ்டர்  பண்டிகையையொட்டி உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் விருந்து அளித்து  மகிழ்வர். சென்னையில் சாந்தோம், பெசன்ட் நகர்  வேளாங்கண்ணி ஆலயம், பெரம்பூர் லூர்து மாதா ஆலயம், லஸ் தேவாலயம், பெரவள்ளூர் உயிர்த்த கிறிஸ்து ஆலயம் உள்ளிட்ட  ஆலயங்களில் சிறப்பு திருப்பலிகளும், கதீட்ரல், வெஸ்லி தேவாலயம், தூய பால் தேவாலயம் உள்ளிட்ட  தேவாலயங்களில் அதிகாலை முதல் சிறப்பு திருப்பலிகளும் ஆராதனைகளும்  நடைபெற்றன.

Related Stories: