ஒரு காரை விற்று தங்க நகை கேட்டு வீட்டில் மனைவி தகராறு கோபத்தில் 2வது காருக்கு தீ வைத்துவிட்டு நாடகமாடிய பாஜ பிரமுகர் கைது

சென்னை: சென்னை மதுரவாயல் கிருஷ்ணா நகர் 1வது தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார்(48), திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜ செயலாளர். நேற்று முன்தினம் நள்ளிரவு வீட்டின் முன் இருந்த இவருடைய கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்படி சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தினர். அதில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது, அதில் ஒரு மர்ம நபரும் அவருடன் ஒரு பெண்ணும் ஒரு காரில் வருவதும், பின்னர் இருவரும் காரை விட்டு இறங்கி சென்று பாஜ பிரமுகரின் காரை தீ வைத்து கொளுத்துவதும் பதிவாகி இருந்தன.இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கட்சி ரீதியாக அல்லது அரசியல் காரணங்களால் ஏற்பட்ட மோதல் காரணமாக காரை கொளுத்தினார்களா அல்லது முன் விரோதம் காரணமாக காருக்கு தீ வைத்தனரா என்ற கோணத்தில் சிசிடிவி காட்சியை கொண்டு விசாரணை நடத்தினர். அதில் பாஜ பிரமுகரான சதீஷ்குமார் தனது காருக்கு தானே தீ வைத்து எரித்தது அம்பலமானது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:சதீஷ்குமாரின் மனைவி நகை வாங்கி தரும்படி அவரிடம் வற்புறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அதற்கு அவர், `தற்போது பணம் இல்லை. பிறகு வாங்கித் தருகிறேன்’ என கூறியுள்ளார். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது மனைவி, `நம்மிடம் 2 கார்கள் உள்ளன. அதில் ஒன்றை விற்று அதில் வரும் பணத்தில் நகை வாங்கிக் கொடுங்கள்’ என்று கேட்டுள்ளார். இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் சதீஷ்குமார் நள்ளிரவில் ஒரு காரை தானே பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது அவரது மகள் அதை தடுக்க சென்றுள்ளார். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் மூலம் சதீஷ்குமார் காருக்கு தீ வைத்தது தெரியவந்தது. அதன் பிறகே கார் தீப்பிடித்து எரிவதாக பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் என தெரியவந்துள்ளது.இதையடுத்து, போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கடுமையாக எச்சரிக்கை செய்து சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.

இதேபோல் சிக்கிய பாஜ பிரமுகர்

இதேபோல் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருவேற்காட்டில் பாஜ பிரமுகரான பரமானந்தம் என்பவர் சொத்து பிரச்னையிலிருந்து குடும்பத்தினரை திசை திருப்ப அவரது வீட்டில் அவரே பெட்ரோல் குண்டு வீசி நாடகமாடி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: