சென்னை தீவுத்திடலில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 14 ஆண்டுகளுக்கு பின் ஸ்ரீநிவாச திருக்கல்யாணம் நடந்தது

* 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்

* கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் வழிபட்டனர்

சென்னை: சென்னை தீவுத்திடலில் நேற்று திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு நிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அமர்ந்து திருக்கல்யாண வைபவத்தைக் கண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சென்னை தீவுத்திடலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில், கடந்த 2008ம் ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி நிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதில், லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இந்தநிலையில், திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் னிவாச திருக்கல்யாண உற்சவம் தீவுத்திடலில் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக அனைத்து துறைகளும் உதவி செய்யும்படி திருமலை திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வேண்டுகோள் விடுத்தார். முதல்வரின் உத்தரவுப்படி அனைத்து துறையினரும் மிகவும் ஆர்வத்துடன் பணிகளை மேற்கொண்டு வந்தனர்.

நேற்று முன்தினம் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், திருமலை திருப்பதி தேவஸ்தான தமிழக தலைவர் ஏ.ஜெ.சேகர் ஆகியோர் திருக்கல்யாண அரங்கினை நேரில் பார்வையிட்டு உரிய ஆலோசனைகளை வழங்கினார். இந்தநிலையில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னை தீவுத்திடலில் நேற்று மாலை 7 மணி அளவில் நிவாச திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. முன்னதாக மாலை 5 மணியிலிருந்து 5.30 மணி வரை வேதபாராயணமும், 5.30 மணியிலிருந்து 6 மணி வரை விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம், 6 மணியிலிருந்து 6.30 மணி வரை அன்னமய்யாவின் பாடல்கள், 6.45 மணிக்கு ஆன்மிக சொற்பொழிவாளர் வேளுக்குடி கிருஷ்ணனின் தொடக்க உரை அரங்கேறியது. இதைத்தொடர்ந்து, இரவு 7 மணிக்கு சீனிவாச திருக்கல்யாண உற்சவம் தொடங்கியது. வேதபாராயணம் முடிந்து பச்சை வண்ண திரைகள் திறந்து பக்தர்களுக்கு பெருமாள் ஆசி வழங்கினார். தொடர்ந்து, தேவி, பூதேவி தாயாருடன் உற்சவர் னிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பின்னர், மந்திரங்கள் ஓதப்பட்டு அக்னி பிரதிஷ்டை நடந்தது. திருக்கல்யாண வைபவத்தை நடத்துவதற்காக உற்சவர் சுவாமி சிலைகள் திருமலையில் இருந்து கொண்டுவரப்பட்டது. பண்டிதர்கள் திருமலையில் இருந்து வரவழைக்கப்பட்டிருந்தனர். இரவு 9 மணி வரை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.திருக்கல்யாண நிகழ்வில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தேவஸ்தானத்தின் தலைவர் சுப்பாரெட்டி, தமிழக தலைவர் ஏ.ஜெ.சேகர் உள்பட பல முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர். சீனிவாச திருக்கல்யாணத்தையொட்டி சென்னை தீவுத்திடல் பகுதி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. பிரம்மாண்ட மேடையில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. திருக்கல்யாணத்தை பார்த்த பக்தர்கள் கோவிந்தா... கோவிந்தா என்று எழுப்பிய கோஷம் விண்ணை பிளந்தது. மேலும், பக்தர்கள் திருக்கல்யாணத்தை காண்பதற்கு வசதியாக 10 பெரிய திரைகள் அமைக்கப்பட்டு இருந்தது.

பக்தர்கள் அமரும் இடங்களில் பிரமாண்ட விளக்குகளும், எல்.இ.டி திரைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. திருமலை திருப்பதியில் இருந்து உற்சவர் சிலைகளும், 40 பட்டாச்சாரியார்களும், 100 வேதபண்டிதர்களும் வரவழைக்கப்பட்டனர்.திருமலை திருப்பதி கோயில் கோபுரம் போன்று திருக்கல்யாண வைபவ மேடை தத்துரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. திருக்கல்யாணத்தை காண வந்த பக்தர்களுக்கு உலக பிரசித்தி பெற்ற திருப்பதி லட்டு, குங்குமம் உள்ளிட்ட பிரசாதங்கள் இலவசமாக வழங்கப்பட்டது. திருக்கல்யாண வைபவத்தை சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கண்டுகளித்தனர்.

மன்றோ சிலை அருகில் இருசக்கர மற்றும் நான்குசக்கர வாகனங்கள் நிறுத்த சிறப்பு வசதி செய்யப்பட்டிருந்தது. வி.ஐ.பிக்களின் வாகனங்கள் தலைமைச் செயலகம், கடற்கரையில் நிறுத்த வசதி செய்யப்பட்டது. மாற்று திறனாளிகளுக்கு நுழைவாயில் எண்.6ல் சிறப்பு வழி அமைக்கப்பட்டிருந்து. சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அரங்கத்தை சுற்றிலும், தீயணைப்பு வாகனங்களும், ஆம்புலன்ஸ் வாகனங்களும் நிறுத்தப்பட்டு இருந்தது. இரண்டு மருத்துவ மையம் அமைக்கப்பட்டிருந்தது.

Related Stories: