ஐகோர்ட் நியமித்த குழுவிடம் உள்ள நாகூர் தர்கா நிர்வாகத்தை அறங்காவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும்: வக்பு வாரியத்திற்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை:  நாகூர் தர்கா நிர்வாக முறைகேடு தொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தர்கா நிர்வாகத்தை கவனிக்க ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி அலாவுதீன், நீதிபதி அக்பர் அடங்கிய தற்காலிக நிர்வாக குழுவை நியமித்தது.இந்நிலையில், தர்காவின் 465வது உர்ஸ் விழாவில் பங்கேற்க முஹாலி முத்தவல்லி என்பவரின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தர்காவின் தற்காலிக நிர்வாக குழு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நான்கு மாதங்களுக்காக நியமிக்கப்பட்ட தற்காலிக நிர்வாக குழு இன்னும் தொடர்வது ஏன் எனக் கேள்வி எழுப்பி குழுவை கலைப்பது குறித்து  விளக்கமளிக்கும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தர்கா நிர்வாகத்தை தொடர விரும்பவில்லை எனவும், வக்ஃபு வாரியத்திடம் ஒப்படைப்பதாகவும் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  

 இந்த உத்தரவாதங்களை ஏற்ற நீதிபதிகள், தர்கா நிர்வாகத்தை அறங்காவலர்கள் வசம் ஒப்படைக்குமாறு வக்ஃபு வாரியத்துக்கு உத்தரவிட்டனர்.  மேலும், உயர் நீதிமன்ற உத்தரவில் தற்காலிக நிர்வாக குழுவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நீக்க வேண்டும் என்று தற்காலிக குழு தரப்பு கோரிக்கை வைத்துள்ளது. எனவே, அந்த குற்றசாட்டுகள் நீக்கப்படுகின்றன என்று உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories: