வன்னியர்களுக்கு 10.5 சதவீத சிறப்பு ஒதுக்கீடு விவகாரம் சட்ட வல்லுநர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை: தலைமை செயலகத்தில் நடந்தது

சென்னை:  கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அதிமுக ஆட்சியில், தேர்தல் அறிவிப்பு வெளியான அன்று அவசர அவசரமாக வெளியிட்டனர். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றம், 10.5 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. இது தொடர்பான பிரச்னை தமிழக சட்டப்பேரவையில், கடந்த 8ம் தேதி கவனஈர்ப்பு தீர்மானமாக கொண்டு வரப்பட்டது. அப்போது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, ஜி.கே.மணி (பாமக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமை கட்சி) ஆகியோர் பேசினர்.

இதற்கு பதில் அளித்து முதல்வர் பேசும்போது, உச்ச நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் ராகேஷ் திவேதி, அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோத்தகி, வில்சன் உள்ளிட்டோர் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சார்பிலே ஆணித்தரமாக வாதாடியிருக்கிறார்கள்.  இந்த வழக்கில் எழுத்துப்பூர்வமான வாதங்கள் தாக்கல் செய்வது, தேவையான ஆவணங்களை பதிவு செய்வது ஆகிய அனைத்திலும் தமிழ்நாடு அரசு மற்றும் அதன் வழக்கறிஞர்கள் செயல்பாடுகள் மிகவும் பாராட்டத்தக்கதாக இருக்கிறது என உச்ச நீதிமன்றமே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறது.

2021 சட்டமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு மாலையில் வரப்போகிறது என்று காலையில் செய்தி வருகிறது.  அன்று மாலையில், குறிப்பாக தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக, இந்த சட்ட முன்வடிவு அவையிலே கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. அந்த அவசரம்தான் உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வெளிவந்த இந்த தீர்ப்பிற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இந்த சிறப்பு இட ஒதுக்கீட்டை பொறுத்தவரைக்கும், சட்ட வல்லுநர்களுடன் உரிய ஆலோசனை நடத்தி, நிச்சயம் சமூக நீதி நிலைநாட்டப்படும்.  அதற்கான அதிகாரம் இந்த மாபெரும் மன்றத்துக்கும், மாநில அரசுக்கும் உண்டு என்று தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கிறது என்றார்.

இந்தநிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தலைமை செயலகத்தில் வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 சதவீதம் சிறப்பு ஒதுக்கீடு தொடர்பான மேல்நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்பிக்கள் பி.வில்சன், என்.ஆர்.இளங்கோ, தலைமை செயலாளர் இறையன்பு, பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை முதன்மை செயலாளர் கார்த்திக், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல ஆணையர் மதிவாணன், அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், சட்டத்துறை செயலாளர்கள் பி.கார்த்திகேயன், சி.கோபி ரவிக்குமார் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், ‘வன்னியர்களுக்கு 10.5 சதவீத ஒதுக்கீடு தொடர்பாக நீதிமன்றம் கூறிய கருத்துக்களையொட்டி தமிழக அரசு அடுத்து எடுக்க வேண்டிய மேல் நடவடிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாக’ கூறப்படுகிறது.

Related Stories: