சித்திரை திருநாள் உற்சாக கொண்டாட்டம்: தமிழ்நாடு முழுவதும் கோவில்களில் சிறப்பு வழிபாடு

சென்னை: சித்திரை திருநாள் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை திருநாளை வரவேற்கும் விதமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துகோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் உள்ள முக்கியக் கோவில்களில் அதிகாலையிலேயே நடை திறக்கப்பட்டு, சாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே தனியார் கல்லூரியில் சித்திரை திருவிழாவை ஒட்டி பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.

இதில் வேஷ்டி, சேலை அணிந்துகொண்டு கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கருப்புத்துணியால் கண்களை கட்டிக்கொண்டு பானை உடைக்கும் போட்டி உற்சாகமாக நடைபெற்றது. மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக கபடி போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். கல்லூரி வளாகத்தில் மாணவிகளுக்கு கோலப்போட்டியும் நடத்தப்பட்டது. போட்டியின் முடிவில் வேற்று பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்லூரி நிர்வாகம் சார்பில் பல்வேறு பரிசுகளும் வழங்கப்பட்டன.      

Related Stories: